தென் தாய்லாந்துக்கு அங்கு செயல்படும் பிரிவினைவாதிகள் கோரியுள்ளது போல சுதந்திரம் சாத்தியமில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அந்தப் பகுதிக்கு தாய்லாந்து குறிப்பிட்ட அளவுக்கு சுயாட்சி உரிமையை வழங்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்லாந்தில் வெளியாகும் இரண்டு ஆங்கில மொழி நாளேடுகளான நேஷன், பேங்காக் போஸ்ட் ஆகியவற்றுக்கு தனித்தனியாக பேட்டியளித்தபோது அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் எந்தக் கோரிக்கையும் தாய்லாந்து அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
“நம்பிக்கைதான் நீண்ட காலத் தீர்வுக்கு வழி- நம்பிக்கை காலப் போக்கில் தெற்கில் உள்ள மக்களுடைய உள்ளத்தைக் கவரும்”, என்று நஜிப் கூறினார்.
அவர் தென் தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார். திரு நஜிப்பும் தாய்லாந்துப் பிரதமர் அபிசிட் விஜஜிவாவும் தென் தாய்லாந்துக்கு வரும் டிசம்பர் மாதம் வருகை புரியவிருக்கின்றனர்.
அதற்கு முன்னர் அவர்கள் இருவரும் பேங்காக்கில் சந்திப்பர். தென் தாய்லாந்தில் நிலவும் வன்முறைக்கு முடிவு கட்ட ஏதாவது ஒரு வகையிலான சுயாட்சி உரிமை தீர்வாக இருக்கலாம் என்றும் நஜிப் கருதுகிறார்.
“நாட்டின் தென்கோடிப் பகுதிக்கு சுயாட்சி உரிமையை எந்த அளவுக்கு வழங்கலாம் என்பது தாய்லாந்து அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தது. அண்டை நாடு என்ற முறையில் மலேசியா அதில் தலையிடாது”, என்று நஜிப் மேலும் கூறினார்.
தென் தாய்லாந்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பட்டாணி, யாலா, நராதிவாட் ஆகிய மாநிலங்களில் சுதந்திரம் கோரி ஆயுதம் ஏந்திய கும்பல்கள் 2004ம் ஆண்டு ஜனவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் இது வரை 3,600 பேர் பலியாகி உள்ளனர்.
Tuesday, October 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment