Pages

Friday, October 23, 2009

இலங்கை அரசு முறையாக வினியோகிக்குமா


இலங்கைத் தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் வந்த நிவாரணப் பொருள்களை, கொழும்பு துறைமுகத்தில் இருந்து எடுத்த, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அவற்றை மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. இலங்கை அரசின் மூலமே அந்த நிவாரணப் பொருள்கள் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருள்கள் ஐந்து மாத அலைகழிப்புக்குப் பிறகு, கடந்த 21ம் தேதியன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருள்களை பெற்றுக் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் அவற்றை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நிவாரணப் பொருள்களை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதாகவும், இலங்கை அரசு மூலம் அவை தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும் என, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கவில்லை."வணங்காமண்' கப்பலில் ஏற்றிவரப்பட்ட மருந்து, உணவுப்பொருள், உடை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களுக்கு சென்று சேரவிடாமல் ஐந்து மாதங்களாக அலைகழித்த, இலங்கை அரசிடமே தற்போது இந்த பொருள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை இலங்கை அரசு முறையாக வினியோகிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இது குறித்து, "மனிதம்' தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது.நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. why red cross doing like this ? After fighting with the Srilankan Government they got back the goods.Then why suddenly they give it back to them and ask the Government to distribute ?
    Is not something fishy ? The whole world is watching.Red Cross really doing justice ?

    ReplyDelete