ஈராக் தலைநகர் பாக்தாத்தை இரு குண்டு வெடிப்பு தாக்குதல்கள் உலுக்கியதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் முழு விழிப்பு நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இரு குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700 பேர் காயமடைந்தனர். அரசாங்க அலுவலங்களும் குண்டு வெடிப்புகளில் சேதம் அடைந்தன.
அத்தாக்குதல்களுக்குப் பிறகு ஈராக்கிய மக்களின் கோபம் ஈராக்கிய அரசாங்கம் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் திரும்பியது.
பாதுகாப்புப் படையினரின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று ஈராக்கியர்கள் பலர் கூறினர். ஆகவே அவர்கள் ஈராக்கிய அரசாங்கத்திற்கு எதிராகப் பேரணி நடத்தினர். அதனைத் தொடர்ந்து பாக்தாத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு அல்-காய்தா தீவிரவாதிகளும் ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனின் அரசாங்க ஆதரவாளர்களுமே காரணம் என்று ஈராக்கிய அரசாங்கம் கூறுகிறது.
பாக்தாத்தில் நடந்த அந்தத் தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு அவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ஈராக்கில் கடந்த ஈராண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறினார். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளின் செயலை அவர் கடுமையாகச் சாடினார்.
ஈராக்கின் முன்னேற்றத்தை இத்தகைய தீவிரவாதத் தாக்குதல்கள் சீர்குலைப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் குறிப்பிட்டார்.
தீவிரவாதிகளின் மிரட்டல் தொடர்ந்து இருப்பதை இத்தாக்குதல்கள் புலப்படுத்துவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் கூறினார்.
தாக்குதல்களில் காயமடைந்த ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment