பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், கடந்த 2007ம் ஆண்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 60 நீதிபதிகளை வீட்டுச் சிறையில் அடைத்து அவசர நிலையை அறிவித்தார். இது தொடர்பாக அவர் அரசிலமைப்பு சட்டத்தை மீறி விட்டதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை பார்லிமென்டில் விவாதத்துக்கு வைத்து, முஷாரப் மீது தேச விரோத குற்றச்சாட்டை சுமத்தும்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வற்புறுத்தி வருகிறார்.

ஆனால், இதற்கு பிரதமர் கிலானி மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சியினரின் நிர்பந்தம் காரணமாக பதவி விலகிய முஷாரப், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சொற்பொழிவாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல், பாகிஸ்தானின் பல்வேறு கோர்ட்டுகளில் அவருக்கு எதிரான தீர்ப்புகள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி இஸ்லாமாபாத் கோர்ட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.பலூசிஸ்தான் தலைவர் பக்டி கொல்லப்பட்ட வழக்கில், முஷாரப் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முஷாரப் ஆட்சியில் இருந்த போது, வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த அபோத்தாபாத்தில் பாதுகாப்பு படையினர், ஒருவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த நபர் இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போனவரை ஒப்படைக்கும் படி கூறி அவரது குடும்பத்தார், அபோத்தாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் முஷாரப் ஆஜராகாவிட்டால் அவரை, "தேடப்படும் குற்றவாளி'யாக அறிவிக்கும் படி உத்தரவிட்டார். இந்த வழக்கில் முஷாரப் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் உத்தர விட்டுள்ளார்.
காணாமல் போனவரது குடும்பத்தார், கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் செய்த போது போலீசார், "முஷாரப் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என தெரிவித்திருந்தனர். தற்போது கோர்ட் உத்தரவை போலீசார் பெற்றுக் கொண்டனர். "கோர்ட் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது" என மனுதாரரின் வக்கீல் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment