Pages

Friday, October 23, 2009

செட்டிநாடு நியூ ரெஸ்டாரண்ட் உணவக உரிமையாளருக்கு 2 மாதச் சிறை


போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்திடம் சமர்ப்பித்து சிங்கப்பூர் நிரந்தரவாச உரிமை பெற்ற இந்திய உணவக இயக்குநர் ஒருவருக்கு நேற்று கீழ் நீதிமன்றம் 2 மாத சிறைத் தண்டனை விதித்தது.
லிட்டில் இந்தியாவில் சந்தர் ரோட்டில் உள்ள செட்டிநாடு நியூ ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தை நடத்தி வரும் இரண்டு பேரில் ஒருவரான தங்கராசு சபாபதி (39) 2004ம் ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாச உரிமையைப் பெற போலி பட்டப் படிப்பு சான்றிதழ் களைச் சமர்ப்பித்தார் என்று கீழ் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தமிழ் நாட்டின் மன்னார்குடியைச் சேர்ந்த சபாபதி, 2001ம் ஆண்டு வேலை அனுமதி அட்டையில் இங்கு வந்தவர்.
அவருக்கு வேலை அனுமதி அட்டை கிடைக்க அப்போது அவருக்கு உதவிய ‘ரவி’ என்ற இந்திய முகவர், உயர்நிலை 4ம் நிலை கல்விச் சான்றிதழ்களை மட்டுமே வைத்திருந்த சபாபதியின் விண்ணப்பப் படிவத்துடன் பாரதிதாசன் பல்கலைக் கழக அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் களையும் இணைத்து சமர்ப்பித்தார்.
அந்த முகவர், சபாபதிக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுக்க 2 லட்சம் ரூபாய் வாங்கியதாவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்கை தொடக்கத்தில் சபாபதிக்குத் தெரியாது என்று சபாபதியை பிரதிநிதித்த வழக்கறிஞர் ராஜன் சுப்பிரமணியம் தண்டனைக் குறைப்பு மனுவில் தெரிவித்திருந்தார்.
2001ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி, சிங்கப்பூர்ப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு 6 மற்றும் 4 வயது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி விட்ட சபாபதி, 2004ம் ஆண்டில் சிங்கப்பூர் நிரந்தர வாசியாக ஆக விண்ணப்பம் செய்தபோது அதே போலி பல்கலைக்கழக சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி மாவட்ட நீதிபதி லியூ தியாம் லெங்கிடம் வாதிட்டார்.
சபாபதி தமது தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருக்கிறார்.
அவர் இப்போது $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment