Tuesday, October 13, 2009
முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் காண்கிறது
முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் காண்கிறது: டாக்டர் யாக்கூப்
சிங்கப்பூரில் முஸ்லிம் சமூகம் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் குடும்ப உறவைக் கட்டிக் காக்கும் அதே வேளையில் முஸ்லிம் சமூகம் மாறும் பொருளியல் சூழலுக்கு ஏற்ப தானும் மாறிக்கொண்டு முன்னேறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
சமூகம் நீண்டகாலம் வளமாக நீடிக்க உடல் நலமும் குடும்ப நிதி வளமும் அவசியம் என்றும் ஆகையால் அவற்றில் சமூகம் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் தனது நோன்புப் பெருநாள் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் தொண்டாற்றுகின்ற, உதவுகின்ற சமூகத் தலைவர்களையும் தொழிலதிபர்கள், ஊழியர்கள் தொண்டூழியர்களையும் டாக்டர் யாக்கூப் பாராட்டினார்.
“மெதுவாக ஆனால் நிச்சயமாக மேலும் பல குடும்பங்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே பொறுப்பு மேற்கொண்டு வருகின்றன,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அந்தக் குடும்பத்தினர் பாடுபட்டு உழைத்து பொருள் ஈட்டி தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.
இதன் மூலம் சிங்கப்பூரின் முன்னேறும் சமூகத்துக்கு முஸ்லிம் சமூகம் உதவ முடிகிறது என்றும் டாக்டர் யாக்கூப் கூறினார்.
தொடர்ந்து முன்னேறும்படி அவர் சமூகத்தை வலியுறுத்தினார்.
“வேறு எதையாவது சொல்வோரால் நாம் நம் கவனத்தைச் சிதறடிக்க வேண்டாம்.
“நீண்ட கால வளப்பத்துக்கு நம் நிதிவளமும் நம் உடல் நலமும் அவசியம்.
“ஆனால் இதற்காக ஒரே குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி உணவு, மகிழ்ச்சி கலந்துறவாடல் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை,” என்று அமைச்சர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment