Tuesday, October 13, 2009
பினாங்கில் இந்திய கிராம வீடுகள் உடைப்பு
பினாங்கில் இந்திய கிராம வீடுகள் உடைப்பு
கோலாலம்பூர்
பினாங்கில் உள்ள இந்திய கிராமமான கம்போங் புவா பாலாவில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை மேம்பாட்டு நிறுவனம் நேற்று மீண்டும் தொடங்கியது.
மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ ஊழியர்கள் வீடுகளை உடைத்து தரைமட்டமாக்குவதற்கான தளவாடங்களுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்.
அந்தப் பணிக்கு வசதியாக அந்த கிராமத்தின் எல்லா நுழைவாயில்களிலும் வெளியேறும் வழிகளிலும் நேற்று போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அந்த கிராம குடியிருப்பாளர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் அதற்குள் நுழையவிடாமல் தடுப்பது அதன் நோக்கம்.
அந்த கிராம குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அங்குள்ள வீடுகளைத் தகர்க்கும் பணியை அந்த நிறுவனம் தொடங்கியது.
அந்த மேம்பாட்டு நிறுவனத்திற்கும் நீதிமன்றப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்றைய தகர்க்கும் பணி தொடங்கியதாக போலிஸ் உயர் அதிகாரி அசாம் அப்துல் ஹமீது கூறினார். குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் ஆனால் மேம்பாட்டு நிறுவனமும் நீதிமன்றமும் வீடுகளைத் தகர்க்கும் பணியை நேற்றே தொடங்கத் தீர்மானித்ததாகவும் அப்துல் ஹமீது கூறினார். நூஸ்மெட்ரோ ஊழியர்கள் வீடுகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது குடியிருப்பாளர்கள் பலர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வீடுகைளக் காலி செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் குடியிருப்பாளர்களில் ஒருவரான எம். இந்திராணி என்ற 60 வயதான மாது அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றதாகவும் மற்ற குடியிருப்பாளர்கள் அதைத் தடுத்து நிறுத்தி அவரை வெளியில் அழைத்து வந்ததாகவும் தகவல்கள் கூறின.
நேற்று மட்டும் 17 வீடுகள் இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். சுகுமாறன், பினாங்கு மாநில அரசு மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் அந்த கிராமத்திற்குள் நுழைய அனுமதித்தற்காக குடியிருப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறினார்.
ஆகஸ்ட் 3, 13 தேதிகளில் அந்த வீடுகளைத் தகர்க்க நூஸ்மெட்ரோ மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிலத்தை விலைக்கு வாங்கிய நூஸ்மெட்ரோ நிறுவனம் அந்த இடத்தில் கண்டோமினிய வீடுகளைக் கட்டவிருக்கிறது. அந்த கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சில குடியிருப்பாளர்கள் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்டபோதிலும் இனி எந்த சலுகையும் வழங்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
courtesy : The Star
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment