Monday, October 12, 2009
இதுதாங்க சிங்கப்பூர்
அனைவருக்கும் வீடு
குடிமக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது பொது வீடமைப்புத் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடுகளைக் கட்டித் தந்துள்ளது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்.
வீவக வீடுகள் மக்களுக்கு வசதியான வாழ்க்கையைத் தந்ததுடன், வளத்தைப் பெருமளவு பெருக்கவும் உதவியது. சிங்கப்பூரர்களின் சொத்து மதிப்பைக் கூட்டியது.
சிங்கப்பூர் மக்களில் கிட்டத் தட்ட 95 விழுக்காட்டினர் சொந்த வீட்டைப் பெற்றுள்ளனர். இந்தச் சொத்து முதலீட்டை தங்களது ஓய்வு காலத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் லீ சியன் லூங் இரு ஆண்டுகளுக்கு முன் கூறினார்.
வசதி குறைந்த குடும்பங்களின் வளத்தை உயர்த்த உதவிய சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டத்தை பல நாடுகளும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளன.
எனினும் அண்மைய வீட்டு விலை ஏற்றங்கள், சொந்த வீடு என்ற கனவு எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
வீவக வீடுகளின் விலை ஏறக்குறைய தனியார் வீட்டு விலை அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில் மதிப்பைவிடக் கூடுதலாகக் கொடுக்கப்படும் கைப் பணத்தின் அளவும் எக்கச்சக்கமாகக் கூடியிருப்பது சிங்கப்பூரர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தோ பாயோவில் ஒரு மூவறை வீட்டுக்கு சாதனை அளவாக, வீட்டின் மதிப்பைவிட அதிகமாக $70,000 கொடுக்கப் பட்டதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த கூடுதல் தொகையின் அளவு தொடர்ந்து ஏறும் என்றே கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் மக்கள் தொகை ஐந்து மில்லியனாகி உள்ளது. இதில் சுமார் கால் பகுதியினர் வெளிநாட்டவர்கள். நிரந்தரவாசத் தகுதி பெறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 2009ல் 11 விழுக்காட்டைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.
வெளிச் சந்தையில் வீவக வீடுகளை நிரந்தரவாசத் தகுதி உள்ளவர்களும் வாங்க முடியும் என்பதால், வீடுகளுக்கான தேவையும் போட்டியும் கடுமையாகி உள்ளது இந்த விலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம்.
தேவையான அளவுக்கு வீடுகள் கட்டப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டான் உறுதியளித்துள்ளார்.
இந்த ஆண்டில் 9,000 வரையில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை வீவக விற்கவுள்ளது.
மேலும் முதல் முறை வீடு வாங்குவோருக்கு நிச்சயம் வீடு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப வீடுகளை வாங்குங்கள்; வீட்டுத் தேர்வில் நீக்குப்போக்காக இருங்கள்,” என்றும் திரு மா ஆலோசனை வழங்கியுள்ளார்.
யூக வணிகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மக்களின் கவலை தீரவில்லை. இந்த அச்சம் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முக்கியமாக திருமணம் செய்வது, வீடு வாங்குவது, குழந்தை பெறுவது என்பது பல இளையர்களுக்குப் பெரும் பாரமாகத் தோன்றும்.
அதனால் திருமணமாகதவர் எண்ணிக்கை கூடும். குழந்தை பிறப்பு விகிதம் குறையும்.
இந்நிலை ஏற்பட சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதிக்காது என நம்பலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment