Monday, October 12, 2009
இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவிடம் கண்ணீர் மல்க தமிழ்மக்கள் முறையீடு
கொழும்பு :
இலங்கை சென்ற தமிழக எம்.பி.,க்கள் குழுவிடம் தங்களது மீள் குடியேற்றம் தொடர்பாக கண்ணீர் மல்க தமிழ்மக்கள் முறையீடு செய்தனர். முகாம்களில் படும் அவஸ்தை குறித்து விளக்கியதோடு, சீக்கிரம் விடிவு காலம் பிறக்க வழி செய்யுங்கள் என மன்றாடி கேட்டுகொண்டனர்..
இலங்கை முகாமில் வாழும் தமிழ்மக்கள் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கென முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 10 பேர் கொண்ட தமிழக எம்.பி.,க்கள் குழு அங்குள்ள முகாம் தமிழர்களை சந்தித்து வருகிறது. முகாம் தமிழர்களை சந்திக்க சனிக்கிழைமை சென்ற குழுவுக்கு இலங்கை அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். இலங்கை சென்றதும் கிழக்கு பகுதி முகாமுக்கு அழைத்து செல்லப்படுவதாக நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அங்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள முகாமில் தான் பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் அங்கு செல்லும் பயணத்தை ரத்து செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள தமிழர்கள் அமைப்பினர் குறை கூறியுள்ளனர்.
யாழ்பாணத்தில் மாணவர் கேள்வி:
யாழ்பாணத்தில் பல்கலை., மாணவர்களுடன் எம்.பி.,கள் குழு கலந்துரையாடியது. அப்போது ஒரு மாணவர், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் இலங்கை தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை தமிழர்களை கொல்லப்போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டதும் குழுவினர் பதில் ஏதும் சொல்லமுடியாமல் திகைத்து போயினர்.
பெண் கலெக்டரிடம் டி. ஆர்.பாலு., கோபம்:
வவுனியா சென்ற போது அங்குள் பெண் கலெக்டர் சார்லசிடம் டி.ஆர்.பாலு., கடுமையாக பேசினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா பகுதி ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சார்லஸ் செய்திருந்தார். அப்போது நீங்கள் யார் ? எங்கள் விஷயங்களில் தலையிடுகிறீர்கள் என டி.ஆர்.பாலு., கோபக்குரலில் கேட்டார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சார்லஸ் கண்ணீர் விட்டு அழுது விட்டார். இதனை பார்த்த கனிமொழி எம்.பி., குறுக்கிட்டு கலெக்டரை சமாதானம் செய்தார். மாவட்ட கலெக்டர் சார்லஸ் நடந்த சம்பவம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு போன் போட்டு சொல்லி விட்டார். தொடர்ந்து தமிழ் கூட்டமைப்பினருடன் குழு கலந்துரையாடியபோது காலம் முடிந்து விட்டது. கூட்டம் முடித்து கொள்ளலாம் என குழுவினர் கூறியதும் தமிழ் கூட்டமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். அவசர, அவசரமாக கூட்டத்தை ஏன் முடித்து கொள்ள வேண்டும் என அங்குள்ள தமிழ் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.கள் அதிகமாக உள்ளனர். இந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமயில் எம்.பி.,க்கள் சேனாதிராஜா, பொன்னம்பலம், சுரேஷ்பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோருடன் எம். பி.க்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த அமைப்பின் சார்பில் எம்.பி.,க்கள் குழுவிடம் , முகாமில் உள்ள தமிழர்களை அவரவர் சொந்த பகுதிகளில் மீள்குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு கண்ணி வெடிகளை காரணம் காட்டி காலம் தாழ்த்துகிறது என எடுத்துரைத்தனர். அகதிகளை பார்வையிட செல்லும் போது தங்களுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என இக்கூட்டமைப்பினர் குறை கூறியுள்ளனர்.மக்கள் விடுதலை முன்னணியும் இக்குழு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கண்ணீர் மல்க தமிழ் மக்கள்: குழுவினரிடம் முகாம் தமிழர்கள் தங்களுக்கு தண்ணீர் கூட முறையாக கிடைப்பதில்லை. 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டுமே தரப்படுகிறது . வழங்கப்படும் தண்ணீரில் 5 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்க முடிகிறது. சுகாதாரக்கேடு சுற்றி ஆக்கிரமித்துள்ளது, தங்களுக்கு நிம்மதியான ஒரு முடிவை அமைத்து தர வேண்டும். விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளனர். முகாம் தமிழர்கள் எம்.பி.,க்கள் குழுவை பார்த்த போது அனைவரும் கண்ணீர் மல்க தழு தழுத்த குரலில் பேசினர். குறிப்பாக தாங்கள் அடிமைப்பட்டு வாழும் நிலை மாறி விரைவில் தங்களது சொந்த பகுதிகளில் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
எம்.பி.,க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு பி.பி.சி., இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், அனைத்து முகாம்களையும் நேரில் பார்த்து விவரங்களை அறிந்தோம். பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்போம். முகாமில் வாழும் தமிழர்களிடம் சுதந்திரமாக பேச முடிந்ததா என்ற கேள்விக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. தமிழர்கள் அனைவரையும் எம்.பி.,க்கள் குழுவினர் தனித்தனியாக, சுதந்திரமாக, விசாரித்து கொள்ள முடிந்தது. எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
மாநில அரசு தெளிவான முடிவு எடுக்காத வரையில் மத்திய அரசு ஒன்றும் செய்யது.இது உள்ளங்கை நெல்லிக்கனி .தமிழ் தமிழ் என்று இங்கு வாய் கிழிய பேசி கொண்டு அங்கே தமிழனை சாக விட்டு கொண்டிருகிறார்கள்
ReplyDelete