
நடிகர், நடிகையர் மிரட்டல் பேச்சு போலீசிடம் விளக்கம் பெற உத்தரவு
சென்னை: நடிகர், நடிகையரின் மிரட்டல் பேச்சுக்கு வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, போலீசாரிடம் இருந்து விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் அன்பழகன் தாக்கல் செய்த மனு:போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு நடிகை, விசாரணையின் போது தெரிவித்த தகவலின்படி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர் கொடுத்த புகாரின் பேரில், செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கடந்த 7ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் கண்டனக் கூட்டம் நடந்தது.
அதில், பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் விதத்தில் நடிகர், நடிகையர் பேசினர். ஆபாசமாக, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். கடந்த 8ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை, பத்திரிகையாளர்கள் 100 பேர் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரினோம்.கண்டனக் கூட்டத்தில், குறிப்பாக நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்கள் விஜயகுமார், விவேக், சத்யராஜ், அருண்குமார், சூர்யா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறு செய்யும் விதத்தில் பேசியுள்ளனர்.
ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அதிக ஆர்வம் காட்டிய போலீசார், நாங்கள் அளித்த புகாரை பொருட்படுத்தவில்லை.நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்கவில்லை. எங்கள் புகாரின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இதேபோன்று, இந்திய உழைக் கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல செயலர்அசதுல்லாவும் மனு தாக்கல் செய்திருந்தார்.இவ்வழக்கு நீதிபதி ரகுபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு போலீஸ் தரப்பில் விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 19ம் தேதிக்கு நீதிபதி ரகுபதி தள்ளி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment