Pages

Wednesday, October 21, 2009

தலிபான்கள் ஜம்பம் பலிக்காது:

இந்தியா


பாகிஸ்தானில் பயங்கரவாதம் கட்டுக் கடங்காமல் பரவுவதாகத் தெரிவித்துள்ள இந்தியா அந்த நாட்டின் நிலைமை கவலைக் கிடமாக ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் பாகிஸ்தானைப் பாடாய்ப் படுத்தி வரும் தலிபான்களின் ஜம்பம் இந்தியாவிடம் பலிக்காது என்றும் புதுடில்லி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் ஹக்கிமுல்லா மெசூத், இந்தியாவுக்கு எதிராகப் போராடப் போவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார்.
இதுபற்றி இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்ல தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும், எந்தக் கோணத்தில் வந்தாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது.
“தலிபான்கள் ஜம்பம் இந்தியாவிடம் பலிக்காது,” என்று சொன்னார்.
“மும்பையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து இந்தியா உரிய பாடம் படித்துள்ளது.
“மீண்டும் அத்தகைய சம்பவம் எதுவும் நிகழாது.
“கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது,” என்று அமைச்சர் அந்தோனி மேலும் சொன்னார்.
“சீனா உள்பட எந்த நாட்டுடனும் பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
“இந்தியாவின் எல்லைகள் பாதுகாக்கப்படும். அதே வேளையில் பக்கத்து நாடுகளுடன் நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசை உருவாக்கப்பட தலிபான்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்து விட்டனர். இதன் விளைவாக பாகிஸ்தானில் பல இடங்களிலும் வன்செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன.
ஏராள குண்டு வெடிப்புகள் மரணங்கள் தற்கொலைத் தாக்குதல்கள் நடக்கின்றன.
இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் திரு அந்தோனி, “பாகிஸ்தானின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது,” என்று சொன்னார்.
“பாகிஸ்தானில் தீவிரவாதம் பரவிவிட்டது.
“பாகிஸ்தான் இதை உண்மையாகவும் உணர்வுப்பூர் வமாகவும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும்.
“பாகிஸ்தானில் பரவிவரும் தீவிரவாதம் உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.
“தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.
“அமைதியை விரும்பும் நாடு களுக்கு தீவிரவாதத்தின் வளர்ச்சி கடும் சவாலாக உள்ளது,” என்று இந்திய அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே இந்திய எல்லைகளிலும் கடலோரப் பகுதிகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்தியத் தகவல்கள் நேற்றுத் தெரிவித்தன.

Tue, 20/10/2009

No comments:

Post a Comment