
இலங்கையில் வருகிற 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் கட்சி வேட்பாளராக அதிபர் மகிந்த ராஜபக்சேவும், எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் பணியும் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்சேகாவின் ஆதரவாளரும், தலைமை பிரச்சார மேலாளருமான அனுராகுமார திசநாயகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் " ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் அவர் தோல்வி அடைந்துவிட்டால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்படுவார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவத்தின் உதவியுடன் அவர் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் " என தெரிவித்தார்.
மற்றொரு பிரச்சார மேலாளர் மங்களசமரவீரா இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,' தேர்தல் வன்முறைகள் குறித்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்படியும்' கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா மறுத்துள்ளார். ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தேவையில்லாமல் தேர்தல் களத்துக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி எதிர்க்கட்சியினர் வெற்றிபெற முயற்சிக்கிறார்கள் என அதிபர் ராஜபக்சேயின் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment