
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய டாக்சி டிரைவர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். நிதின்கார்க் என்ற பஞ்சாப் இளைஞர், கடந்த மாதம் குத்திக் கொல்லப்பட்டார். "இந்த தாக்குதல்களால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும்' என, மத்திய அரசு, ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்துள்ளது.
வழக்கம் போல் வருத்தம் தெரிவிக்கும் ஆஸ்திரேலிய அரசு, பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக கூறி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரிஸ்பேனில்,மேக்ரிகார் பகுதியில் டாக்சி ஓட்டிச் சென்ற இந்தியர் தலை மீது, பயணி ஒருவர் இரண்டு முறை தாக்கியுள்ளார். இது குறித்து இந்திய டிரைவர் போலீசுக்கு போன் செய்ய முயற்சித்த போது, அவரிடமிருந்த மணிபர்சை பறித்துக் கொண்டு அந்த நபர் ஓடிவிட்டார். அந்த நபர் உயரமாகவும், சுருட்டை முடி கொண்டவனாகவும் இருந்தான் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை பிரிஸ்பேனின் கேரின்டேல் பகுதியில் இந்திய டாக்சி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு பயணிகள், டிரைவரின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் டிரைவர் முகம் வீங்கியது. வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment