
இந்திய தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் வைர விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கிவைக்கும் இந்த விழாவில், பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல் கமிஷன் வைர விழாவில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போனில் தொடர்பு கொண்டு தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
டெல்லியில் வசந்த விகார் பகுதியில் உள்ள வீட்டில் தங்குகிறார். இன்று மாலை அவர் டெல்லியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை தேர்தல் கமிஷன் வைர விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களோ, அ.தி.மு.க. தலைவர்களோ உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் இன்று காலை கூறுகையில், சோனியாவை சந்தித்துப்பேச எங்கள் தரப்பில் இருந்து இதுவரை எதுவும் கேட்கப்படவில்லை. நாளை (திங்கள்) எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
இதற்கிடையே அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் இருவரும் இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் டெல்லி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இவர்கள் இருவரும் செய்துள்ளனர்.
சோனியாவை ஜெயலலிதா சந்தித்துப்பேசுவாரா? என்று கேட்ட போது இவர்கள் தங்களுக்குத் தெரியாது என்றனர். ஆனால் இவர்கள் இருவரும் ஜெயலலிதா சில தலைவர்களை சந்தித்துப் பேச முன் அனுமதி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஜெயலலிதா கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சந்தித்துப் பேசினார். அன்றைய தினம் அவர்கள் இருவரும் தனியாக சுமார் 1 1/2மணி நேரம் பேசி அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.
வாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற சூட்டோடு சூடாக சோனியாவை அன்று சந்தித்த ஜெயலலிதா மத்தியில் புதிய ஆட்சி ஏற்படுத்த முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வில்லை.
அதன் பிறகு சோனியா- ஜெயலலிதா நட்பில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக சோனியாவை ஜெயலலிதா கண்டுகொள்ள வில்லை. பாராமுகத்துடன் இருந்தார்.
சோனியா உறவை துண்டித்த ஜெயலலிதா, அதோடு நில்லாமல் அவரை கடுமையாக விமர்சனமும் செய்தார். குறிப்பாக 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற கோஷத்தை எழுப்பினார். ஆனால் அது மக்களிடம் எடுபடவில்லை.
இதையடுத்து தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்க முயன்றார். ஆனால் மாநில கட்சித் தலைவர்களிடம் ஒரு மித்த கருத்து ஏற்படாததால் அந்த அணி தோன்றிய வேகத்திலேயே காணாமல் போய்விட்டது.
இந்த நிலையில் சோனியாவுக்கு செல்வாக்கு அதிகரித்தாலும், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், சோனியாவை விமர்சிப்பதை ஜெயலலிதா தவிர்த்தார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் காங்கிரசையும், சோனியாவையும் விமர்சித்து பேசக்கூடாது என்று அவர் சமீபத்தில் உத்தரவிட்டதாக தெரிகிறது.
2011-ம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க, காங்கிரஸ் கட்சியுடன் நட்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜெயலலிதா நினைப்பதாக தெரிகிறது. எனவே தான் தேர்தல் கமிஷன் வைர விழாவை வாய்ப்பாக பயன் படுத்தி டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நாளை சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 2011-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய 4 கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை ஏற்படுத்த அம்மா நினைக்கிறார். இதில் அவர் தீவிரமாக காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், காங்கிரசுடன் உள்ள கசப்புணர்வை எங்கள் தலைவி எப்படி மாற்றப்போகிறார் என்று தெரியவில்லை. நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
டெல்லியில் இன்றும், நாளையும் 2 நாட்கள் தங்கி இருக்கும் ஜெயலலிதா நாளை இரவு சென்னை திரும்ப உள்ளார்.
No comments:
Post a Comment