
உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தராஞ்சல் மாநிலம் ஹரித்வாரில் சமீபத்தில் கும்ப மேளா நடந்தது. இந்த விழா நடந்த சமயத்தில் உத்தரபிரதேசத்தின் பாண்டா நகரத்தருகே உள்ள கிராமத்தில், காதலர் திருவிழா கொண்டாடப்பட்டது. பாண்டா நகரத்தில் மஜா நதி ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையோர கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் திருவிழா நடக்கிறது. இந்த கிராம இளைஞர்கள் கயிற் றின் மீது நடப்பதில் வல்லவர் களாக இருக்கின்றனர். இதற்கு பின்னணியாக கதை ஒன்று சொல்கின்றனர்.
பண்டைய காலத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞனை பாண்டா நகரத்து இளவரசி காதலித்தாராம். ஆனால், இதற்கு மன்னன் அனுமதி மறுத்து விட்டாராம். இருப்பினும் மணந்தால் கிராமத்து இளைஞனை தான் மணப்பேன், என இளவரசி பிடிவாதம் பிடித்ததால் மன்னன் ஒரு நிபந்தனை விதித்துள்ளான். "அருகே உள்ள மலைக்கும், கோட்டைக்கும் இடையே உள்ள மஜா நதியின் மீது கயிறு கட்டி அந்த கயிற்றின் மீது கிராமத்து இளைஞன் நடக்க வேண்டும். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை கயிற்றின் மீது நடந்து கடந்தால், அந்த இளைஞனை மணக்கலாம்' என, மன்னர் நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை ஏற்று கயிற்றின் மீது நடக்க கிராமத்து இளைஞன் ஒப்புக் கொண்டான். ஆனால், மன்னன் உஷாராக திடமில்லாத கயிற்றை ஆற்றின் மீது கட்ட செய்திருந்தான்.
இதையறியாத கிராமத்து இளைஞன், கயிற்றின் மீது நடக்கும் போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து இறந்தான். இந்த செய்தி கேள்விப்பட்டு இளவரசியும் தற்கொலை செய்து கொண்டாள். இவர்களின் நினைவாக இந்த கிராமத்தில், கோவில் கட்டப்பட்டுள்ளது. இறந்த போன இளவரசியும், கிராமத்து இளைஞரும் இந்த கிராமத்துக்கு வரும் காதலர் களின் காதலை நிறைவேற்றி வைப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான காதலர்கள் இந்த கிராமத்தில் கூடி தங்கள் காதல் கைகூட வேண்டும், என கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர். இந்த திருவிழாவின் போது கிராமத்து இளைஞர்கள் கயிற்றின் மீது நடக்கும் போட்டியை நடத்தி வெற்றி பெறுகின்றனர்.
No comments:
Post a Comment