
"நாட்டின் நலன் காக்க மாணவர்கள் அறிவார்ந்த நூல்களை படிக்க வேண்டும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகத்திற்கு, வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகள் நூல்களை சேகரிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மாணவிகள் நூல்களை கேட்ட போது தன் கையிருப்பிலுள்ள 300க்கும் மேற்பட்ட நூல்களை வைஷ்ணவா கல்லூரி மாணவிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி அன்பகத்தில் நேற்று நடந்தது.
இதில், பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:அரசு விழாக்களுக்கு செல்லும் போது பல இடங்களில் நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்குகின்றனர். அந்த புத்தகங்களை அந்தந்த பகுதியில் உள்ள நூலகங்களுக்கு வழங்குகிறேன்.நான் எப்போதும் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டுவேன். அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சாலை, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அனைத்து ஊராட்சிகளிலும் ஐந்தாண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 680 ஊராட்சியில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மாணவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.காமராஜர், கருணாநிதி போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மாணவர்களுக்காக பல நலத்திட் டங்களை உருவாக்கி உள்ளனர்.வீடு செழிக்க வேண்டுமானால் நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும். நாட்டின் நலன் காக்க, இன்றைய மாணவர்கள் அறிவார்ந்த நூல்களை படிக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.இந்நிகழ்ச்சியில், வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment