Pages

Friday, January 22, 2010

இந்திய விமானங்களை நடுவானில் கடத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்


இந்திய விமானங்களை நடுவானில் கடத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற 'திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், இந்த சதி வேலைகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர் என, மத்திய அரசை, மேலை நாடுகளின் உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.




"நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் ஏர் - இந்தியா விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தலாம். அல் - குவைதா, லஷ்கர் -இ- தொய்பா, ஜமாத் -உத்- தாவா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபடலாம். குறிப்பாக, ஏர் - இந்தியா நிறுவன விமானங்கள் கடத்தப்படலாம்' என மேலை நாடுகளின் உளவு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, ஏர் - இந்தியா விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.




மத்திய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு செயலர் யு.கே.பன்சால் இதுபற்றி கூறியதாவது: வெளிநாடுகளுக்கு செல்லும் நமது விமானங்களை பயங்கரவாதிகள் கடத்த முயற்சிக்கலாம் என, நாங்கள் சந்தேகிக்கிறோம். அதனால், கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும்படி, உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளோம். நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான பாதுகாப்புப் பிரிவை கேட்டுக் கொண்டுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள குறிப்பாக, சார்க் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஏர் - இந்தியா மற்றும் இதர இந்திய விமான நிறுவனங்களின் ஊழியர்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே, பயங்கரவாதிகளின் நோக்கம். அவர்களின் நோக்கத்தை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பன்சால் கூறினார்.




யாங்கூன், தாகா, கொழும்பு விமான நிலையங்களில் இருந்து இந்தியாவுக்கு புறப்படும் விமானங்கள் அல்லது பூடான் நாட்டிலிருந்து புறப்படும் அல்லது அந்நாட்டிற்கு செல்லும் விமானத்தைக் கடத்த பயங்கரவாதிகள் முற்படலாம் என நம்பப்படுவதால், அவற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் உஷார் நடவடிக்கையை அடுத்து, சில வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில், அதிரடிப்படை மார்ஷல்களை பயணிகளைப் போல அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்திய விமானங்கள் கடத்தப்படலாம் என்ற தகவல், பயங்கரவாதிகளின் பேச்சுக்களை மேலை நாட்டு உளவு நிறுவனங்கள் இடைமறித்துக் கேட்டதில் தெரிய வந்துள்ளது.




பயங்கரவாதிகளின் கடத்தல் மிரட்டலை அடுத்து, சார்க் நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை கடுமையாக பரிசோதிக்கும்படி, விமான நிறுவனங்களை சிவில் விமான பாதுகாப்புப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஏர் - இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன தகவல் தொடர்பாளர்கள் கூறுகையில், "பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை, அவர்களின் கடத்தல் முயற்சியை முறியடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். சில வழித்தடங்களில் செல்லும் விமானங்களில் அதிரடிப்படை மார்ஷல்களை அனுப்பியுள்ளோம். விமானத்தில் பயணிக்க படிக்கட்டில் ஏறும் முன், மீண்டும் பயணிகள் பரிசோதிக்கப்படுவர். பாதுகாப்பை உறுதி செய்ய வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்"என்றனர்.

No comments:

Post a Comment