
போதிய வருமானம் இல்லாததாலும், விலை வாசி உயர்வாலும், மனைவி, குழந்தைகளை கிராமத்திற்கு அனுப்பி விட்டு, நகரத்தில் பிரம்மச்சாரியாய் குடும்பம் நடத்தும் நடுத்தர வகுப்பு ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், கிராமப்புறங்களை சேர்ந்த, நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பலர், வேலை வாய்ப்புக்காக, நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.அவர்கள், தங்கள் வருவாய்க்கு ஏற்ப, வீடுகளை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசிக்கின்றனர். தலைநகர் சென்னை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஊதியம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, நகர்புறங்களில் வீட்டு வாடகையை உரிமையாளர்கள் உயர்த்தினர். அதுபோல, காய்கறி முதல் மளிகை பொருட்கள் வரை, அனைத்துப் பொருட்களின் விலையும், பள்ளி அட்மிஷன் கட்டணம், வேன் வாடகை என, அனைத்தும் உயர்ந்தது.
இந்த விலைவாசி உயர்வு, நகரங்களில் குடும்பத்துடன் வசிக்கும் குறைந்த வருவாய் பெறும் கிராமப் புற தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.இதனால், அவர்களில் பலர், சமீபகாலமாக வீடுகளை காலி செய்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளை கிராமங்களில் உள்ள தங்கள் சொந்த ஊரில் குடியேற்றி வருகின்றனர். இவ்வாறு குடும்பத்தை அனுப்பிவிடும் ஆண்கள், தனி அறை எடுத்து கூட்டாக வசித்து, தங்கள் வருமானத்தை, தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது.
No comments:
Post a Comment