Pages

Sunday, January 3, 2010

செல்போன் தடை

அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள் பஸ் ஓட்டும்போது செல்போன் எடுத்து செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறும் டிரைவர்கள் மீது, போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பஸ் டிரைவர்கள், இப்படிச் செய்து, விபத்து ஏற்படும்போது உயிர் இழப்பு அதிகம் ஏற்படுகிறது. வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் தண்டனை விதிக்க சட்டம் உள்ளது. எனினும் நீண்ட தூர பயணத்தின்போது, டிரைவர்கள் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டுவதை கண்காணிக்க முடிவதில்லை. எனவே, பயணிகளின் நலன் கருதியும் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பஸ் ஓட்ட செல்லும் போது அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு பஸ் டிரைவர்கள், பஸ்சை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவதால் விபத்துகள் ஏற்படுவதாக, அரசுக்கு பல புகார்கள் வந்துள்ளன.
எனவே, அரசு பஸ் டிரைவர்கள் பணியில் இருக்கும்போது செல்போன் எடுத்துச் செல்ல கூடாது. இதை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பஸ் ஓட்ட செல்லும்போது, டிரைவர்கள் செல்போன் எடுத்து செல்லாதவாறு போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பயணிகள் மற்றும் அனைவருடைய பாதுகாப்பையும் கருதி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இதையும் மீறி பணியின்போது செல்போன் எடுத்து செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவுக்கு பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்து இருப்பது மிகவும் பொருத்தமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரன் " நடத்துநர்கள் பணிக்கு வரும் போது தங்களிடம் இருக்கும் சொந்த பணத்தை பயணச்சீட்டு வழங்கும் அதிகாரிகளிடம் ஒப்படைத்து, பணி முடிந்த பிறகு பெற்றுச் செல்ல வசதி உள்ளது. அதேபோல, ஓட்டுநர்கள் தங்கள் செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு, பணிமுடிந்து வாங்கிச் செல்வதற்கான ஏற்பாட்டை முதலில் செய்ய வேண்டும். பணியில் இருக்கும் போது, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தங்கள் வசமே வைத்து கொள்வதில் தவறு இல்லை என்று கருதுகிறோம். அவசர அவசியத்துக்கு குடும்பத்தினர் தொடர்பு கொள்ள செல்போன் பெரும் உதவியாக உள்ளது. இதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment