தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் மைய பகுதியாக, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று `மஹா கர்ஜனை' என்ற பெயரில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் அணி, அணியாக வந்து இந்த பேரணியில் பங்கேற்றனர். பல்கலைக்கழக அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை, வழியில் ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக குற்றம் சாட்டினார்கள். நிரம்பி வழிந்த மைதானத்தில், எங்கு பார்த்தாலும் `ஜெய் தெலுங்கானா' என்ற கோஷம் எதிரொலித்தது. போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.
நக்சலைட் ஆதரவாளரான கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கானா ஆதரவு இயக்கத்தினரும் பேரணியில் பங்கேற்று பேசினார்கள். தனி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சி அலுவலகங்களை தகர்த்து தரைமட்டமாக்குவோம் என்று கூட்டத்தில் பேசிய மாணவர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஐக்கிய ஆந்திராவை வற்புறுத்தி நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பதிலடியாக, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியில் இருந்து தெலுங்கானா பகுதிக்கு ரெயில், பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் நுழையவிடமாட்டோம் என்றும் எச்சரித்தனர்.
தனி தெலுங்கானா கோரிக்கை நிறைவேறாவிட்டால், தற்போது பொங்கல் விடுமுறைக்கு சென்று இருக்கும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட யாரையும் ஐதராபாத்திற்குள் நுழையவிடுவது இல்லை என்றும் பேரணி முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலுங்கானா விவகாரத்தில் பல்டி அடித்த தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் நிலை பற்றி தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. தெலுங்கானா பகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தனி தெலுங்கானா அமைவதை, போலீசாரின் `லத்தி'களோ அல்லது துப்பாக்கி குண்டுகளோ தடுத்து நிறுத்திவிட முடியாது என்று சபதம் ஏற்ற மாணவர்கள், தனி தெலுங்கானா அறிவிப்பு வரும் வரை உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என்றும் அறிவித்தனர்.
தனி தெலுங்கானா போராட்டத்தை விளக்கும் உணர்ச்சிகரமான கலைநிகழ்ச்சிகளையும் மாணவ, மாணவிகள் பேரணியில் நடத்தினார்கள்.
இந்த நிலையில், தனி தெலுங்கானா விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆந்திராவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நேற்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றும்படி பேச்சுவார்த்தையின்போது வற்புறுத்தப்போவதாக தெரிவித்தார்.
டெல்லியில் லாலு பிரசாத் யாதவ், அஜீத்சிங், சரத்பவார் போன்ற பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தரப்பில் டெல்லி பேச்சுவார்த்தையில் ஆந்திராவின் மூன்று பகுதிகளின் (தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா) சார்பில் 3 பேர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி என்ற முறையில் கே.ரோசய்யாவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் அதன் தலைவர் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்கிறார். தெலுங்குதேசம் சார்பில் பங்கேற்பவர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment