Pages

Sunday, January 3, 2010

ஆந்திர பிரச்சனை -மத்திய அரசின் அலஷியதால் தமிழ்நாட்டிற்கு பல கோடி நஷ்டம்

ஆந்திராவில் நிலவிவரும் தெலுங்கானா பிரச்னையால், தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற் உற்பத்தி முடங்கியுள்ளதால் வர்த்தகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஆந்திராவில் மாறி மாறி நடக்கும் பிரச்னையில், அரசியல் கட்சிகளிடம் பிரிவினை ஏற்பட்டு மாநிலமே ஸ்தம்பித்துபோய் உள்ளது. அதிகரித்துவரும் பதட்டம் காரணமாக ஆந்திராவில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், மிளகாய், நூற்பாலை பஞ்சு, அரிசி, புகையிலை உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது முடங்கி உள்ளது.

இதுமட்டுமின்றி பஸ்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால், அம்மாநில அரசுக்கு 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களிலும் வருவாய் இழப்பை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, தமிழகத்தில் உற்பத்தியாகும் உலக பிரசித்திப்பெற்ற பொருட்களை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், கன்னியாகுமரி - வாரணாசி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-7) மற்றும் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை (என்.எச்- 5) வழியாக ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.


தென்மாவட்டங்களில் இருந்து என்.எச்-7, தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லும் சரக்கு வாகனங்கள் அனந்தபூர், கர்நூல், ஐதராபாத் ஆகிய தெலுங்கானா பகுதிகளை கடந்த பிறகே மற்ற மாநிலங்களுக்கு செல்ல முடியும்.இதேபோல தமிழகத்தில் இருந்து என்.எச்-5 தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் சரக்கு லாரிகள் நெல்லூர், குண்டூர், விஜயவாடா ஆகிய ஆந்திர பகுதிகளை கடந்த பிறகு தான் பிற மாநிலங்களை அடைய முடியும். இதுவே, தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு உற்பத்திப் பொருட்களை அனுப்புவதில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.


இதன்காரணமாக, சென்னையில் தயாராகும் ஆட்டோமொபைல் பொருட்கள், காஞ்சிபுரம் பட்டு நெசவு துணிகள், கோயம்புத்தூர் மோட்டார்கள், திருப்பூர் பின்னலாடைகள், மதுரை எவர்சில்வர் பொருட்கள், நூல்கள், நாமக்கல் இறைச்சி கோழிகள், முட்டைகள், ஈரோடு போர்வைகள், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், உற்பத்திப் பொருட்கள் தேக்கமடைந்து வருகின்றன.தூத்துக்குடி உப்பு, கடலூர் முந்திரி, மரவள்ளி கிழங்கு ஆகியவற்றையும் எடுத்து செல்ல முடியவில்லை. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்திப் பொருட்கள் முடங்கியுள்ளதால் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தொழில் உற்பத்தி, முடங்கியுள்ளதால் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு வருவாய் இழப்பு மேலும் அதிகரித்து, தொழிற் உற்பத்தி முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது

No comments:

Post a Comment