
ஆசிய_ ஆப்பிரிக்கப் பட விழாவில் சிறந்த நடிகராக தேர்வு பெற்றதன் மூலம், சிவாஜிகணேசன், புகழின் சிகரத்தைத் தொட்டார். அதிர்ஷ்ட சக்கரமும் வேகமாக சுழன்றது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். கட்டபொம்மன் வெளிவந்த 1959_ல் தங்கப்பதுமை, நான் சொல்லும் ரகசியம், மரகதம், அவள் யார், பாகப்பிரிவினை ஆகிய படங்கள் சிவாஜி நடிப்பில் வெளிவந்தன.
இவற்றில் "பாகப்பிரிவினை" பெரிய வெற்றிப்படம். ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம்: ஏ.பீம்சிங். கதை_ வசனத்தை சோலைமலை மிகச்சிறப்பாக எழுதியிருந்தார். இசை: விஸ்வநாதன் _ ராமமூர்த்தி. சிவாஜிகணேசனின் ஜோடி _சரோஜாதேவி. இருவரும் சிறப்பாக நடித்தனர்.
இதில் எம்.ஆர்.ராதா அற்புதமாக நடித்ததால், தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 1960_ம் ஆண்டில், இரும்புத்திரை, குறவஞ்சி, தெய்வப்பிறவி, ராஜபக்தி, படிக்காத மேதை, பாவைவிளக்கு, பெற்ற மனம், விடிவெள்ளி ஆகிய படங்களிலும் 1961_ம் ஆண்டில் பாவமன்னிப்பு, புனர்ஜென்மம், பாசமலர், எல்லாம் உனக்காக, ஸ்ரீவள்ளி, மருதநாட்டு வீரன், பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களிலும் சிவாஜி நடித்தார்.
இதில் "இரும்புத்திரை" ஜெமினி ஸ்டூடியோவில் எடுத்த படம். சிவாஜியுடன் வைஜயந்திமாலா, சரோஜாதேவி, எஸ்.வி.ரங்கா ராவ், எஸ்.வி.சுப்பையா, வசுந்தராதேவி ஆகியோர் நடித்தனர். எஸ்.எஸ்.வாசன் டைரக்ட் செய்தார். இது வெள்ளி விழாப்படம்.
"குறவஞ்சி", மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. கதை, வசனம் மு.கருணாநிதி. டைரக்ஷன் காசிலிங்கம். இதில் சிவாஜியின் ஜோடியாக சாவித்திரி நடித்தார். "தெய்வப்பிறவி", ஏவி.எம்.கூட்டுறவுடன் கமால் பிரதர்ஸ் தயாரித்த படம். இதில் சிவாஜியின் ஜோடி பத்மினி. இருவரும் போட்டி போட்டு நடித்தனர்.
"ராஜபக்தி"யில் சிவாஜியுடன் பத்மினி, பானுமதி, வைஜயந்தி மாலா, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தும், கதை அமைப்பு சரியில்லாததால் படம் வெகு சாதாரணமாக அமைந்துவிட்டது.
25_6_1960_ல் வெளிவந்த பாலா மூவிஸ் "படிக்காத மேதை", சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம். எஜமான விஸ்வாசம் கொண்ட வெகுளி இளைஞனாக நடித்த சிவாஜிகணேசன், பல இடங்களில் கண் கலங்க வைத்தார். ரங்காராவ், சவுகார்ஜானகி, கண்ணாம்பா ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.
ஆஷா பூர்ணதேவியின் கதைக்கு, நெஞ்சைத் தொடும் விதத்தில் வசனம் எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இசை: கேவி.மகாதேவன். டைரக்ஷன்: ஏ.பீம்சிங். சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த பத்து படங்களைத் தேர்ந்தெடுத்தால், அதில் நிச்சயம் இடம் பெறக்கூடிய படம் இது.
"பாவை விளக்கு" அகிலன் எழுதிய சிறந்த நாவல். விஜய கோபால் பிக்சர்சார் படமாக்கினார்கள். ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதினார். டைரக்ஷன் கே.சோமு. சவுகார்ஜானகி, பண்டரிபாய், குமாரி கமலா, எம்.என்.ராஜம் ஆகிய 4 பேர் சிவாஜியை காதலிப்பது போல் கதை அமைந்திருந்தது. அகிலனின் உணர்ச்சி மிக்க நடையால் வாசகர்களைக் கவர்ந்த கதை, திரை ரசிகர்களைக் கவரவில்லை.
"காவியமா இல்லை ஓவியமா" என்ற பாடல் காட்சியை தாஜ்மகாலில் பிரமாதமாகப் படமாக்கியிருந்தார், ஒளிப்பதிவாளர் வி.கே.கோபண்ணா. "பராசக்தி"யைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் எடுத்த படம். "பெற்ற மனம்" டாக்டர் மு.வரதராசனார் எழுதிய கதை. பெரியாரை நினைவூட்டும் தோற்றத்தில் சிவாஜி தோன்றி தன் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லுவார்.
நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த படம். ஏ.பீம்சிங் டைரக்ட் செய்திருந்தும் வெற்றி பெறவில்லை. "விடிவெள்ளி", பிரபுராம் பிக்சர்ஸ் தயாரித்த படம். கதை, வசனம், டைரக்ஷன் ஆகியவற்றை ஸ்ரீதர் கவனித்தார். அவர் டைரக்ஷனில் சிவாஜி நடித்த முதல் படம். சிவாஜியின் ஜோடி சரோஜாதேவி. இது நூறு நாள் படம்.
1961_ல் வெளியான படங்களில் "பாசமலர்", சிவாஜியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல். ராஜாமணி பிக்சர்ஸ் பேனரில், எம்.ஆர்.சந்தானமும், கே.மோகனும் தயாரித்த படம். வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, ஏ.பீம்சிங் இயக்கினார். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி.
இதில் அண்ணனாக சிவாஜிகணேசனும், தங்கையாக சாவித்திரியும் நடித்தனர். அண்ணன் _தங்கை பாசம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் அந்தப் பாத்திரங்களில் வாழந்து காட்டினார்கள். ஆரம்பத்தில் சிவாஜியின் நண்பனாக இருந்து, சாவித்திரியை மணந்த பின் விரோதியாக மாறும் கதாபாத்திரத்தில் ஜெமினிகணேசனும் நன்கு நடித்தார். படத்தின் முடிவு, கண்ணீரை வரச்செய்தது. 25 வாரம் ஓடிய "பாசமலர்", ஒரு காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.
இதேபோல், சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலு மணி தயாரித்த "பாலும் பழமும்" தரமான படைப்பு. இதில் சிவாஜியுடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். இருவரும் சிறப்பாக நடித்தனர். விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைப்பில், "போனால் போகட்டும் போடா" உள்பட எல்லாப் பாடல்களும் செவிகளில் தேன் பாய்ச்சின.
இந்தப் படத்தின் கதை_வசனத்தை ஜி.பாலசுப்பிரமணியம், பாசுமணி ஆகியோர் எழுதினர். சிவாஜி _ பீம்சிங் கூட்டணியின் இமாலய வெற்றிப் படங்களில் இந்தப் படமும் உண்டு.
பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம். 7_11_1961_ல் இப்படம் வெளிவந்தபோது, இதற்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய வசூல் கிடைக்கவில்லை என்றாலும், மறு வெளியீட்டில் மக்களின் வரவேற்பைப் பெற்றது.
வ.உ.சிதம்பரனார் எப்படி இருந்திருப்பார் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. மற்றும் ஜெமினிகணேசன், சாவித்திரி, எஸ்.வி.சுப்பையா, டி.கே.சண்முகம், துரைராஜ், பாலாஜி ஆகியோர் நடித்தனர். "சிலம்புச்செல்வர்" ம.பொ.சிவஞானமும், சித்ரா கிருஷ்ண சாமியும், திரைக்கதையை அமைக்க, வசனம் எழுதியவர்: எஸ்.டி.சுந்தரம். பாரதியாரின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்தவர்: ஜி.ராமநாதன்.
பி.ஆர்.பந்துலு சிறந்த முறையில் தயாரித்து இயக்கிய இப்படம், 1961_ம் ஆண்டுக்கான தேசிய விருதை (வெள்ளிப்பதக்கம்) பெற்றது. 1946_ல் "ஸ்ரீவள்ளி" படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். ரூ.2 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட படம் ரூ.20 லட்சம் லாபம் சம்பாதித்தது. படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால், மெகாஹிட் படமாக அமைந்தது.
1961_ல் அதே புராணக் கதையை நரசு ஸ்டூடியோ மீண்டும் தயாரித்தது. வசனம்: பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுத, ராமண்ணா இயக்கினார். சிவாஜி வேலன், வேடன் விருத்தனாக நடிக்க, பத்மினி வள்ளியாக தோன்றினார்.
இந்தப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. புகழ் பெற்ற ஒரு வார இதழ், இப்படத்துக்கு விமர்சனமாக ஒரு பக்கம் முழுவதையும் "முருகா, முருகா" என்ற எழுத்துக்களால் நிரப்ப, இன்னொரு பத்திரிகை "அரோகரா" என்ற ஒரே வார்த்தையில் விமர்சனத்தை முடித்துக்கொண்டது.
உண்மையில் சிவாஜிக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்" "ஸ்ரீவள்ளி."
No comments:
Post a Comment