தனிதெலுங்கானா அமைப்பதற்கான முடிவு நிறுத்தி வைக்கப்பட்டதால் தெலுங்கானா பகுதியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளை (3-ந் தேதி) ஐதரா பாத்தில் மாணவர்கள் தனி தெலுங்கானாவை வலியுறுத்தி “கர்ஜனை” போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் திரள்கிறார்கள்.
5 லட்சம் மாணவர்கள் இந்த கர்ஜனை போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கூட்டம் நடத்தி கர்ஜனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் நக்சலைட்டுகள், சமூக விரோதிகள், ரவுடிகள் பங்கேற்று வன்முறையை தூண்டிவிட சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து இந்த கர்ஜனை போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
கர்ஜனை போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் நூற்றுக்கணக்கானோர் நேற்று ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதில் உண்ணாவிரதம் இருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய மாணவர்களும் பங்கேற்றனர்.
சிறிது நேரம் தர்ணா போராட்டம் நடத்திய மாணவர்கள் பின்னர் பேரணியாக புறப்பட்டனர். மாநில உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து மனுகொடுத்தனர்.
நாங்கள் அமைதியாக போராடுகிறோம். ஆனால் எங்கள் உரிமையை தட்டிப்பறிக்கும் வகையில் கர்ஜனை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மந்திரி சபிதா இந்திராரெட்டியிடம் வலியுறுத்தினார்கள்.
போலீஸ் கமிஷனரிடம் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்வதாக மாணவர்களிடம் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கர்ஜனை போராட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் வரங்கல் மாவட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு அரசு பஸ்சையும், 2 லாரிகளையும் தீவைத்து எரித்தனர். 2 பஸ்களை உடைத்து நொறுக்கினார்கள். இதில் பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ராயபாத்து பகுதியில் ஒரு பஸ் உடைக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment