பொதுவாக, நாடகங்களில் தொடர்ந்து பெண் வேடம் போடும் சிறுவர்கள் நடப்பது, பேசுவது எல்லாம் பெண்கள் போலவே மாறிவிடுவது உண்டு. ஆனால், சிவாஜிகணேசன் பெண் வேடம் மட்டும் அல்லாமல் ஆண் வேடங்களும், மாறுபட்ட வேடங்களும் ஏற்று நடித்தார். அதனால் எதிர்காலத்தில் எந்த வேடம் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.
சிவாஜி நடித்து வந்த நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதாவும் நடிகராக சேர்ந்தார். ``பதிபக்தி" நாடகத்தில் சிவாஜி, சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடிப்பார். எம்.ஆர்.ராதா வில்லனாக நடிப்பார்.
``நாடகத்துறையில் ராதா அண்ணனுக்கு எல்லா வேலைகளும் தெரியும். அவர் ஒரு ஜீனியஸ். எலெக்ட்ரிக் வேலைகளும் செய்வார். காமெடி தெரியும். ஹீரோவாக நடிப்பார். வில்லனாக நடிப்பார். எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பார்" என்று சிவாஜி கூறியுள்ளார்.
சிவாஜிகணேசன் நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான்.
``காக்கா ராதாகிருஷ்ணனுக்குத்தான், இயற்கையாகவே காமெடியான முகம் இருக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். சிவாஜி கணேசனை, நாடகக்கம்பெனியில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர்.
சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. ``தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார். பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.
சில நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார், சிவாஜி. ஒரு நாள் எம்.ஆர்.ராதா ஜட்கா வண்டியில் அங்கு வந்தார். ``சில நாட்கள் உங்கள் வீட்டில் தங்கப்போகிறேன்" என்றார். ``என்ன அண்ணே விசேஷம்?" என்று சிவாஜி விசாரித்தார்.
``நான் பொன்னுசாமிபிள்ளை கம்பெனியில் இருந்து விலகி விட்டேன். சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப்போகிறேன். நீயும் அதில் சேரவேண்டும்" என்றார்.
சிவாஜிக்கு குழப்பமாகிவிட்டது. தனக்கு ஆதரவு தந்து, நடிப்பு கற்றுக்கொடுத்த கம்பெனியை விட்டு விலகுவதா என்று யோசித்தார். அதே சமயம் ராதாவின் பேச்சை தட்டவும் முடியவில்லை. நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ராதாவுடன் செல்ல முடிவு செய்தார்.
இதுபற்றி தன் தாயாரிடம் கூறினார். ``ஏம்பா! பழைய கம்பெனியை விட்டு போகிறேன் என்கிறாயே. சரியாக இருக்குமா?" என்று தாயார் கேட்டார். ``நான் ராதா அண்ணனை நம்புகிறேன். அண்ணன் ஏதாவது நல்லது செய்வார்" என்றார் சிவாஜி.
எம்.ஆர்.ராதாவும், ``நான் பையனை மெட்ராசுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன். கட்டாயம் நல்ல எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று ராஜாமணி அம்மாளிடம் கூறினார்.
ராதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டார், சிவாஜி. அவர் சென்னையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.
சென்னை ஜார்ஜ் டவுனில், தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் சிவாஜியை தங்க வைத்தார், ராதா. நாடகக் கம்பெனிக்கான உடைகள், சீன்கள் போன்றவற்றை சேகரித்தார்.
சிவாஜியை ஒரு நாள் ரிக்ஷாவில் ஏற்றி, ஊரைச் சுற்றிப்பார்த் துவிட்டு வருமாறு அனுப்பினார். சிவாஜி அதிசயத்தோடு சென்னையைச் சுற்றிப்பார்த்தார்.
``சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்க ராதா முடிவு செய்தார். நாடக சாமான்களுடன் ஈரோடு சென்றார். அங்கு ``லட்சுமி காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்களை நடத்தலானார்.
திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.
ராதாவின் நாடகக் கம்பெனி ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றது. அப்போது, ராதாவுக்கும், அவருடைய பங்குதாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நாடக சாமான்களுக்கு அவர்கள்தான் முதலீடு செய்திருந்தார்கள். எனவே, நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு ராதா சென்னைக்கு சென்றுவிட்டார். நாடகக் கம்பெனியில் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிவாஜி இருந்தார்.
நாடகக் கம்பெனி, கேரளாவுக்குச் சென்று பாலக்காட்டில் முகாமிட்டது. சிறு வேடங்களில் நடித்து வந்த சிவாஜி, ``மனோகரா" நாடகத்தில் கதாநாயகனாக _மனோகரனாக நடித்தார்.
இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment