பள்ளி மாணவி ருச்சிகாவை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில், அரியானா முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., ரத்தோருக்கு, பஞ்ச்குலா கோர்ட் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அரியானா போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்தவர் ரத்தோர். கடந்த 1990ல், ருச்சிகா என்ற பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், ரத்தோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, ருச்சிகாவின் சகோதரரை கொலை செய்ய முயற்சித்தாகவும், ருச்சிகா பிரேத பரிசோதனை அறிக்கையை போலியாக தயாரித்ததாகவும், ரத்தோருக்கு எதிராக, புதிய எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்ஜாமீன் பெறுவதற்காக பஞ்ச்குலா செஷன்ஸ் மற்றும் மாவட்ட கோர்ட்டில், ரத்தோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. ரத்தோர் தரப்பில் அவரது மனைவியும், பிரபல வக்கீலுமான அபா ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:சட்டத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில், ரத்தோருக்கு எதிராக மீடியாக்கள் செயல்படுகின்றன. இதனால், இந்த வழக்கு பெரிது படுத்தப்பட்டுள்ளது. ருச்சிகாவின் குடும்பத்தினர், இந்த வழக்கின் மூலம் பொதுமக்களிடம் ஹீரோ இமேஜை பெற முயற்சிக்கின்றனர். ருச்சிகா குடும்பத்தினரின் பின்னணி மோசமானது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ருச்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலியாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. ரத்தோரின் நெருக்கடி காரணமாக, ருச்சிகா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுவதும் தவறானது. விசாரணையை எதிர்கொள்வதற்கு நாங்கள் பயப்படவில்லை. இந்த வழக்கில் இருந்து, ரத்தோருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அபா வாதாடினார்.
மனுவை விசாரித்த நிதிபதி எஸ்.பி., சிங், "இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை ரத்தோருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோர்ட் அனுமதியின்றி, ரத்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது' என, உத்தரவிட்டார்.
ருச்சிகாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வக்கீல் பங்கஜ் பரத்வாஜ், கோர்ட்டுக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"வழக்கின் அடுத்த விசாரணையின்போது, ரத்தோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து, மேல் முறையீடு செய்வோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது"என்றார்.
Friday, January 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment