
தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா மகள் பவித்ரா- சித்தார்த்தன் திருமணம் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ராஜா பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். முதலில் அவர் எனக்கு சாதாரண கட்சிக்காரர் என்ற முறையில் அறிமுகமானார். ஒருமுறை ரெயிலில் பயணம் செய்தபோது அவர் தன்னைப்பற்றியும், தான் ஆற்றிய தொண்டு, கட்சி பணி பற்றியும் எடுத்துரைத்தார். அவரது பேச்சையும் செயல் திறத்தையும் அறிந்து கொண்ட நான் அவருக்கு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க நினைத்தேன். அதன்படி சட்டசபை உறுப்பினர் ஆகி இருக்கிறார்.
அவரது பகுதி பிரச்சினைகள் எல்லாவற்றை அவரே தீர்த்து வைத்து விடுகிறார் என்று கூறினார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளை தொந்தரவு செய்து தொகுதிக்கு வேண்டியதை செய்கிறார் என்று குறிப்பிட்டார்கள்.
பிரச்சினையே இல்லாத நேரத்தில் அவரே பிரச்சினையாகி அதை நான் தீர்த்து வைத்து இருக்கிறேன். அமைச்சர் நேரு இங்கு பேசும் போது, அவர் யார் என்பதை காட்டிக்கொண்டார். அடை மொழியும் சேர்த்து சொல்லி பாராட்டினார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் தோன்றிய முதல் மாநில அரசாகிய தமிழ்நாட்டிற்கு முதல்- அமைச்சராக இருந்தார். அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் பெரியார் விரும்பும் வழியில் பிற்பட் டோர், மிகவும் பிற்பட்டோருக்காக அரும்பாடு பட்டார். அவரை காங்கிரஸ்காரர்கள் மறந்து விட்டனர். என்றாலும் நான் மறக்கவில்லை. அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் பெயர் வைத்து எனது அஞ்சலியை செலுத்தினேன்.
திராவிட இயக்கம் சாதி- பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் இயக்கம். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் முன்னேற்றத்திற்காக அக்கறையுடன் செயல்படும் இயக்கம்.
சமூக நீதிக்கு சோதனை வந்தபோது பெருந்தலைவர் காமராஜர் உள்பட பல்வேறு தலைவர்கள் போர்க்குரல் கொடுத்து, அதை காப்பாற்றி இருக்கிறார்கள். ஓமந்தூரார் தாடி வைக்காத பெரியார் என்று குறிப்பிடுவார்கள். திராவிட இயக்க கொள்கைகளை கொண்ட அவர் தேசிய இயக்கத்தில் இருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடி புகழ்பெற்றவர்.
அவரது பெயரை போற்றும் வகையில் புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சாதி உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக நாம் கைவிட வேண்டும். அதை உள்ளத்தில் இருந்து அகற்ற வேண்டும். சமூக ஒற்றுமை சமூக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் சாதி உணர்வு கூடாது.
நாம் எல்லோரும் இந்திய நாட்டவர். இங்குள்ள அனைவரும் தமிழ் சாதி என்ற ஒரே சாதியாக அமர்ந்து இருக்கிறோம். இங்கிருந்து வெளியேறும்போது 5 பேர், 10 பேர் சேர்ந்து தங்களது சாதியைப்பற்றி பேசி தமிழர் என்ற ஒற்றுமையை மறந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழர் இனம் என்ற ஒரே உணர்வை பெறும் மண்டபமாக இந்த திருமண மண்டபம் அமைய வேண்டும். மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, நேரு, அன்பரசன், கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், யசோதா, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், எம்.பி.க்கள் ஜெயத்துரை, இளங்கோவன் ஆகியோர் பேசினார்கள்.
தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் டி. காமராஜ், நகர தி.மு.க. பொருளாளர் டி.ஆர். கோபி, கவுன்சிலர்கள் இந்திரன், செல்வகுமார், டி.வி. ராம மூர்த்தி, ஜான் கென்னடி, வட்ட செயலாளர்கள் ஏ.ஆர். ரமேஷ், ஸ்ரீதர்குமார் என்ற பாபு, கே.ரமேஷ்பாபு, ஏ. மாசிலாமணி, மதுரைப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமுதா வேல்முருகன், செம்பாக்கம் ரமேஷ், முடிச்சூர் ஊராட்சி தலைவர் பா.தாமோதரன், ரூபி பில்டர்ஸ் நிறுவனர் ரூபி மனோகரன், தாம்பரம் நகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ். சேகர், செயல் அலுவலர் ரங்கன், துணைத்தலைவர் புகழேந்தி, முன்னாள் கவுன்சிலர் ஜோதிகுமார், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் வ.க. ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment