இந்த மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷேவும் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற இவர்கள் இருவரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி, ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை விட, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று ராஜபக்ஷே வெற்றி பெற்றார். எனவே, தமிழர்களின் ஓட்டும் கிடைத்தால் தான், இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபர் பதவியை ராஜபக்ஷே பெறமுடியும் என்ற நிலை உள்ளது. ராஜபக்ஷேவும் சரி, பொன்சேகாவும் சரி, இலங்கை தமிழர்களையும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்தவர்கள் என்றும், தமிழர்கள் நல்வாழ்வுக்கு இதுவரை எந்த நன்மையும் செய்யவில்லை என்று, அங்குள்ள தமிழர் கட்சிகள் கருதுகின்றன. இருவரில் ஒருவருக்கு ஓட்டு போடுவது என்பது, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும் என்பது, அக்கட்சிகளின் கருத்தாக உள்ளது.
சமீபத்தில், அகில இலங்கை காங்கிரசின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் யாழ்பாணத்தில் நடந்தது. பொதுச் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடந்த இக்கூட்டத் தில், நடக்க உள்ள அதிபர் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், அனைவரின் ஒப்புதலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்க வேண்டும் என்றும், அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தேசிய கூட்டணியும் எங்களை பின்பற்றி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று, அகில இலங்கை காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டணியில் நடந்த கூட்டத்தில், யாரை ஆதரிப்பது என்பதில் முரண்பட்ட கருத்து வெளிப்பட்டது. முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவை ஆதரிக்கலாம் என்றனர் சிலர். ஆனால், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். யாழ்பாணத்தை சேர்ந்த எம்.பி.,க் களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரம்நாதன், சாலமன் சிரில் தமிழ் தேசிய கூட்டணியின் பார்லிமென்ட் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்கக்கூடாது என்று, வாதிட்டு வருகின்றனர்.
தமிழ் கட்சிகள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி இலங்கைத் தமிழர்களின் கவலையோ வேறு மாதிரியாக உள்ளது. உள்நாட்டு போர் காரணமாக, பல ஆண்டுகளாக நிம்மதியை இழந்து தவித்த அவர்கள், இறுதிப் போருக்கு பின்னராவது நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் இந்த நினைப்பிற்கு எதிர்வரும் அதிபர் தேர்தல் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. வரும் அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவையும், பொன்சேகாவையும் தமிழ் கட்சிகள், ஆதரிக்காத நிலை ஏற்பட்டால், தேர்தலுக்கு பின் யார் வெற்றி பெற்று வந்தாலும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்டுவார்களா என்பது, சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கும். மேலும், தமிழர்கள் மீது ஒரு வெறுப்பு ஏற்படும் நிலையும் உருவாகும். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில், மீண்டும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று, இலங்கைத் தமிழர்கள் அச்சப்படுகின்றனர்.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment