
இலங்கை அதிபர் தேர்தலில் கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிகா, எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு திடீரென ஆதரவு தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் நாளை (ஜன., 26) நடக்கிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள், இலங்கையில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷே மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு வெற்றிலைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி - ஜனதா விமுக்தி பெரமுனா கூட்டணி சார்பில், ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகிறார். இவருக்கு, அன்னப் பறவை சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லையெனில், அதிக ஓட்டுகளை பெற்ற, முதல் இரண்டு வேட் பாளர்கள் மட்டும் போட்டியில் நீடிப்பர்.இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப ஓட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவற்றில் அதிக ஓட்டுகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வன் முறை அதிகரிக்கும் என்ற பீதி காரணமாக, 68 ஆயிரம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியையும் சுற்றி 500 மீட்டர் பரப்பளவு, பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
திருப்பம்: பிரசாரம் முடிந்துள்ள நிலையில், தேர்தலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை நேரில் அழைத்து, தேர்தலில் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். ஹொராகொலியா என்ற இடத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை கையாளும் அரசின் நிர்வாகத்தையும் கடுமையாக தாக்கி, சந்திரிகா அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:தேர்தல் அறிவித்ததில் இருந்து, நாடு முழுவதும் பரவலாக வன்முறை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள் ளது. இது, ஜனநாயகத் துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சவால். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான சுதந்திரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமை. நீண்டகாலமாக பல்வேறு தியாகங்கள் செய்து, இந்த சுதந்திரத்தை மக்களுக்கு அளித்து வருகிறோம். இது தொடர வேண்டியது அவசியம்.எனவே, நேர்மையான, அமைதியான தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஒவ்வொரு வாக்காளருக்கும், எந்தவித அச்சமும் இன்றி ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். மக்களின் உரிமைகள் மீறப்படுமானால், அது நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.இவ்வாறு சந்திரிகா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
"தேர்தல் நடக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் இந்த அதிரடியான முடிவு, அதிபர் ராஜபக்ஷேவுக்கு பின்னடைவை ஏற்படுத் தும்' என, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment