
ஐதராபாத்தில் நடக்கவிருந்த ஐ.பி.எல்., தொடரின், "டுவென்டி-20' துவக்க போட்டி, மும்பைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, ஐதராபாத் நகரின் சர்வதேச பெருமைக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. இது துவக்கம் தான் என்றும், இதுபோன்ற மேலும் பல பின்னடைவு ஐதராபாத்துக்கு ஏற்படும் என்றும், ஆந்திராவில் கவலையான குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. மாநில அரசும் கலக்கம் அடைந்துள்ளது.
தெலுங்கானா பிரச்னையால், கடந்த இரண்டு மாதங்களாக ஆந்திர மாநிலத்தின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் துறையினரின் அபரிதமான முதலீடு என, வீறு நடை போட்டுக் கொண்டிருந்த ஆந்திர தலைநகர், தற்போது நடந்து வரும் தொடர், "பந்த்' காரணமாகவும், வன்முறை காரணமாகவும் முடங்கிக் கிடக்கிறது. போக்குவரத்து, கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என, அனைத்துமே இன்னும் முழு அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தெலுங்கு பட உலகினரும், சென்னைக்கு தங்களது முகாமை மாற்றி விடலாமா என, யோசித்து வருகின்றனர். தொழில் துறையினர் குறிப்பாக, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பெங்களூரு அல்லது சென்னைக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். அரசுக்கு வர வேண்டிய வருவாய்கள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால், கஜானாவும் காலியாகக் கிடக்கிறது.
இந்நிலையில், தெலுங்கானா பிரச்னையால் ஐதராபாத் நகரின் பெருமைக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. வரும் மார்ச் 12ல் துவங்கி, ஏப்ரல் 25 வரை ஐ.பி.எல்., தொடரின், "டுவென்டி-20' போட்டிகள் நடக்கவுள்ளன. இதன் துவக்க விழாவும், அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகளும் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடப் பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திராவைச் சேர்ந்த டெக்கான் சார்ஜர் அணி தான், ஐ.பி.எல்., நடப்பு சாம்பியன். இதனால், ஆந்திராவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், டெக்கான் சார்ஜர் அணி நிர்வாகமும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவர்களின் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஒரு கசப்பான சம்பவம் நடந்தது. ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், ஆந்திரா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. இந்த மைதானத்துக்கு அருகில் தான் உஸ்மானியா பல்கலை உள்ளது. தெலுங்கானாவுக்கு ஆதரவான போராட்டம், இந்த பல்கலையை மையமாக வைத்து தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அங்கிருந்து புறப்பட்ட தெலுங்கானா ஆதரவு மாணவர்கள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்க முயற்சித்தனர். இதனால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த கசப்பான சம்பவத்தால், ஐ.பி.எல்., நிர்வாகிகள் கலக்கம் அடைந்தனர். உடனடியாக ஐ.பி.எல்., போட்டியின் துவக்க விழாவை ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு மாற்றுவதாக அறிவித்து விட்டனர். இந்த நிகழ்வு, ஆந்திர மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அசாருதீன், லட்சுமண் போன்ற கிரிக்கெட் ஹீரோக்கள் உருவான நகரத்தில், கிரிக்கெட் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என கவலையடைந்துள்ளனர். மாநில அரசும் கலக்கம் அடைந்துள்ளது.
No comments:
Post a Comment