சிவாஜிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "புதிய பறவை", மேல் நாட்டுப்படங்களுக்கு நிகராக சிறப்பாக அமைந்தது. 1962_ல் பார்த்தால் பசி தீரும், நிச்சயதாம்பூலம், வளர்பிறை, படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா, வடிவுக்கு வளைகாப்பு, செந்தாமரை, பந்தபாசம், ஆலயமணி ஆகிய 9 படங்களிலும், 1963ல் சித்தூர் ராணி பத்மினி, அறிவாளி, இருவர் உள்ளம், நான் வணங்கும் தெய்வம், குலமகள் ராதை, பார் மகளே பார், குங்குமம், ரத்தத்திலகம், கல்யாணியின் கணவன், அன்னை இல்லம் ஆகிய 10 படங்களிலும் சிவாஜி நடித்தார். 1964ல் நடித்த படங்கள்:_ கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, முரடன் முத்து, நவராத்திரி. சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "புதிய பறவை". ஆங்கிலப் படம் ஒன்றின் கதையைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு ஆரூர்தாஸ் சிறப்பாக வசனம் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "பார்த்த ஞாபகம் இல்லையோ", "உன்னை ஒன்று கேட்டேன்", "எங்கே நிம்மதி", "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து" முதலான எல்லா பாடல்களும் இனிமையாக ஒலித்தன. சிவாஜிகணேசனுடன் சரோஜாதேவி, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் இணைந்து நடித்தனர். தாதா மிராசி டைரக்ஷனில், திரைக்கதை அமைப்பு, நடிப்பு, படப்பிடிப்பு, இசை அனைத்தும் சிறப்பாக அமைந்த "புதிய பறவை", மேல்நாட்டுப் படங்களுக்கு இணையான மெகாஹிட் படம். சிவாஜிகணேசனின் 100 வது படம் என்ற சிறப்புக்கு உரியது "நவராத்திரி". இதில் அவர் 9 வேடங்களில் நடித்தார். ஏ.பி.நாகராஜனின் விஜயலட்சுமி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. சிவாஜிகணேசனின் 100 வது படம் என்ற முறையில், அவரது நவரச நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் விதத்தில், இக்கதையை உருவாக்கினார், நாகராஜன். கதாநாயகி (சாவித்திரி) மாப்பிள்ளை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். 9 விதமான மனிதர்களை சந்திக்கிறார். அந்த 9 விதமான கதாபாத்திரங்களாக சிவாஜி நடித்தார். சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட இந்தப்படம், நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. பத்மினி பிக்சர்ஸ் சார்பாக பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய பிரமாண்டமான படம் "கர்ணன்." சிவாஜிகணேசன் ஜோடியாக தேவிகா நடித்தார். துரியோதனாக அசோகன், அவர் மனைவியாக சாவித்திரியும் நடித்தனர். கிருஷ்ணனாக என்.டி.ராமராவ் நடித்தார். வசனத்தை சக்திகிருஷ்ணசாமி எழுத, இசையை விஸ்வநாதன் _ ராமமூர்த்தி அமைத்தனர். பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்தன. கிட்டத்தட்ட கட்டபொம்மனுக்கு நிகராக படம் அமைந்தும், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் மீண்டும் ரிலீஸ் ஆனபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. "பாசமலர்" வெற்றிக்கூட்டணியை வைத்து ஒரு படத்தை உருவாக்க ரங்கநாதன் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி ஏற்பாடு செய்தது. அந்தப்படம்தான் "படித்தால் மட்டும் போதுமா?" "பாச மலர்" படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்துக்கும் வசனம் எழுதினார். "பாசமலர்" படத்தை டைரக்ட் செய்த ஏ.பீம்சிங் இந்தப் படத்தை டைரக்ட் செய்ய ஒப்பந்தம் ஆனார். பாசமலர் படத்தில் நடித்த சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரை ஒப்பந்தம் செய்ய பட அதிபர்கள் சென்றபோது படத்தில் நடிக்க சிவாஜி, சாவித்திரி இருவரும் ஒப்புக் கொண்டனர். ஜெமினி மறுத்துவிட்டார். காரணம் _கதை! ராஜசுலோசனாவைத் திருமணம் செய்ய வேண்டிய அண்ணன் (படித்தவன்) சாவித்திரியையும், சாவித்திரியை திருமணம் செய்யவேண்டிய தம்பி (படிக்காதவன்) ராஜசுலோசனாவையும் (ஆள் மாறாட்டம் செய்து) மணப்பதாக கதை. "சாவித்திரியை ஏமாற்றித் திருமணம் செய்வது போன்ற இந்தக் கதையில் நான் நடிக்க மாட்டேன்" என்று ஜெமினிகணேசன் மறுத்துவிட்டார். எனவே, ஜெமினி நடிக்கவேண்டிய வேடத்தில் பாலாஜி நடித்தார். "பெண் ஒன்று கண்டேன்..." என்ற அற்புதமான பாடலைக் கொண்ட இப்படம், நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் உருவான படம் "கை கொடுத்த தெய்வம்." இதை "சிவாஜி படம்" என்று கூறுவதை விட, "சாவித்திரி படம்" என்று கூறுவதே பொருந்தும். வெகுளிப்பெண் வேடத்தில், நடிப்பின் சிகரத்தை சாவித்திரி தொட்டார். இதில், சிவாஜி வெகு இயல்பாக நடித்திருந்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர். விஜயா, ரங்காராவ், எம்.ஆர். ராதா ஆகியோரும் நடித்தனர். இசை: விஸ்வநாதன் _ ராமமூர்த்தி. சிவாஜியுடன் சரோஜாதேவி, தேவிகா ஆகியோர் இணைந்து நடித்த படம் "குலமகள் ராதை." அகிலன் எழுதிய கதைக்கு, ஏ.பி. நாகராஜன் வசனம் எழுதினார். கே.வி.மகாதேவன் இசையில், மிகச்சிறந்த பாடல்கள் இடம் பெற்ற வெற்றிப்படம். இந்தியா _சீனா போரை மையமாக வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் "இரத்தத் திலகம்". வசனங்களை கண்ணதாசன் சிறப்பாக எழுதியிருந்தார். இதில் சிவாஜிக்கு ஜோடி சாவித்திரி. ஆங்கிலத்தில் இடம் பெற்ற "ஒத்தெல்லோ" என்ற ஓரங்க நாடகம், படத்தின் சிறப்பு அம்சமாக அமைந்தது. கண்ணதாசன், பழைய மாணவராகத் தோன்றி "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என்ற பாடலைப்பாடினார். படம் வெளிவந்தபோது, யுத்தம் முடிவடைந்து, சமாதான சூழ்நிலை நிலவியது. எனவே, படம் பிரமாதமாக ஓடவில்லை. பிரசாத் மூவிஸ் தயாரித்த "இருவர் உள்ளம்", பிரபல நாவலாசிரியை லட்சுமி எழுதிய "பெண்மனம்" என்ற கதை. அதற்கு மு.கருணாநிதி வசனம் எழுதினார். படத்தை எல்.வி.பிரசாத் டைரக்ட் செய்தார். "மனோகரா" படத்துக்கு பிறகு சிவாஜி _ கருணாநிதி _ எல்.வி. பிரசாத் என்ற "மூவர் கூட்டணி" இடம் பெற்ற படம் இது. படம் மிக இயற்கையாக, பெண்களைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. கே.வி.மகா தேவன் இசையில், பாடல்கள் சிறப்பாக ஒலித்தன. கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் வி.சி.சுப்ப ராமன் தயாரித்த படம் "பார் மகளே பார்". ஆரூர் தாஸ் வசனம் எழுதிய இப்படத்தை பீம்சிங் டைரக்ட் செய்தார். இதில் சிவாஜி கணேசனுக்கு ஜோடி சவுகார்ஜானகி. விஜயகுமாரியும், புஷ்பலதாவும் மகள்களாக நடித்தனர். இந்த இருவரில் ஒருவர் மட்டும்தான் தன் மகள் என்று பிறகு சிவாஜிக்கு தெரிகிறது. தன் சொந்த மகள் யார் என்ற மனப்போராட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும், சிவாஜியின் உண்மை மகள் யார் என்ற புதிருக்கு கடைசி வரை விடை தரப்படாததால், படம் நூறு நாட்களை மட்டுமே எட்ட முடிந்தது
No comments:
Post a Comment