Pages

Wednesday, January 20, 2010

மும்பையில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்


மும்பையில் டாக்சி பெர்மிட் வழங்க மகாராஷ்டிரா அரசு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பெர்மிட் பெறுவதற்கு மும்பையில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். மராத்தி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், வட மாநிலத்தினர் விரட்டப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே கூறி வருகிறார். இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் கடந்த ஆண்டு வட மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மும்பையில் டாக்சி ஓட்ட பெர்மிட் பெறுவதற்கு காங்கிரஸ் & தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாராஷ்டிரா கூட்டணி அரசு புதிய கட்டுபாடுகள் விதித்துள்ளது. மும்பையில் நேற்று காலை முதல்வர் அசோக் சவான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மும்பையில் குறைந்தது 15 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கும், மராத்தியை எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே டாக்சி பெர்மிட் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பெர்மிட் பெற்றவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்று அரசு கூறியுள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனந்த் காட்கில் கூறியதாவது;

தீவிர ஆலோசனைக்கு பிறகே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அரசுக்கு கடுமையான நிர்ப்பந்தம் இருந்தது. அனைத்து இன மற்றும் மதத்தை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. வெளி மாநில மக்களின் வருகையால் உள்ளூர் மக்களின் வாய்ப்புகள் பறி போகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. வட மாநில மக்கள் மும்பைக்கு வருவதை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மும்பையில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் யார் வேண்டுமானாலும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து டாக்சி பெர்மிட் பெறலாம். இவ்வாறு காட்கில் கூறினார். அரசின் இந்த முடிவை சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. ‘மகாராஷ்டிராவில் கிடைக்கும் எல்லா பலன்களும் இந்த மாநில மக்களுக்கே கிடைக்க வேண்டும். அரசின் இந்த புதிய விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்று அவை கூறியுள்ளன. அதே நேரம், ‘பாம்பே டாக்சி யூனியன்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் செயலாளர் அல் குவாத்ரோஸ் கூறுகையில், ‘‘அரசின் முடிவு கடும் கண்டனத்துக்கு உரியது. மும்பை ஒரு பெருநகரம். இங்கு எந்த மாநிலத்தை சேர்ந்தவர் வருவதையும் தடுக்க முடியாது’’ என்றார். மும்பையில் டாக்சி டிரைவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment