முப்பது ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையில், தற்போது அமைதி திரும்பியுள்ளதால், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், ஏராளமான தமிழர்கள் கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினர்.
தற்கொலைப் படையினரின் அச்சம் இல்லாமல், ராணுவத்தினரின் அதிரடிச் சோதனை இல்லாமல், யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று நேற்றுமுன்தினம் சுவாமி தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலில் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க, தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை இலங்கை நிர்வாகத்தினர் அகற்றியதை அடுத்து, ஏராளமான தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகவும், சுவாமி தரிசனம் செய்யவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். புத்த தலங்களுக்கும் ஏராளமானவர்கள் சென்றனர்.பலாலி விமானப் படை தளம், காங்கேசன் துறை கடற்படை முகாம், ராணுவ தலைமையகத்திலும், மத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தப் பாதையில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.ஏ-9 என, அழைக்கப்படும் கண்டி - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலைதான், கொழும்பையும், யாழ்ப்பாணம் தீபகற்பத்தையும் இணைக்கும் நிலவழித் தடம். இந்த வழித்தடத்தில், கடந்த நவம்பர் 13ம் தேதி போக்குவரத்து துவங்கியது. இருந்தாலும், இந்த சாலையில் பயணிக்க வேண்டும் எனில், ராணுவ அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். அந்தக் கட்டுப்பாடு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், ஏராளமானவர்கள் பயணிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தைப் போல, கிழக்கு திரிகோணமலையில் உள்ள கோவில்களிலும் புத்தாண்டை ஒட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மட்டக்களப்பில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நேற்றுமுன்தினம் கூட்டம் நிரம்பி வழிந்தது. நள்ளிரவு பிரார்த்தனைகளும் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கு அம்பாறையில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் மற்றும் ஸ்ரீலிங்கேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மொத்தத்தில், இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment