தமிழர்களின் பாரம்பரிய இசை மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
கிராமிய கலைகளை நகர மக்களும் அறிந்து கண்டு மகிழும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் ஜனவரி 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒரு வாரம் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. " தமிழ் மையம், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி- பண்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன. இந்த நிகழ்ச்சி 3 ஆண்டுகளை கடந்து 4-வது ஆண்டில் காலடி பதிக்கிறது.
2010-ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி கலை- பண்பாட்டு திருவிழா என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
சென்னை சங்கமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்பட 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இடையில் நாட்டுப்புற நடனப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. இந்த போட்டிகள் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.
இறுதிச்சுற்று போட்டி சென்னை சங்கமம் நிறைவு விழா நாளன்று பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட மேற்கத்திய இசை குழுக்கள் கலந்து கொள்கின்றன. அவர்கள் உலக அமைதி என்ற பொருளில் இசைப்பார்கள்.
இசைக் குழுக்களுக்கு இடையே போட்டிகளும் நடைபெற உள்ளன.
சென்னை சங்கமம் தொடக்க விழா ஜனவரி 10-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் உள்ள சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி அரங்கில் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தும் பிறப்பொக்கும்....என்ற இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி அன்று அரங்கேற்றப்படுகிறது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தலைப்பான பிறப்பொக்கும் என்ற வாசகமே சென்னை சங்கமம் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
ஜனவரி 11 முதல் 15-ந்தேதி வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:-
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பல்லாவரம் கண்டோன்மென்ட் பள்ளி வளாகம், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரங்கு, பெரம்பூர் திரு.வி.க. நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், மெரீனா லேடி வெலிஸ்டன் கல்லூரி அரங்கு, தீவுத்திடல் அரங்கு, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா.
அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் தந்தை பெரியார் அரங்கு, அசோக்நகர் பூங்கா, ராயபுரம் அண்ணா பூங்கா, நுங்கம்பாக்கம் சுதந்திர தின விழா பூங்கா, செனாய் நகர் திரு.வி.க. பூங்கா, பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் சென்னை சங்கமம் நடக்கிறது.
இவை தவிர ஒரு சில இடங்களில் தேவைக்கு ஏற்ப கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் நடந்த விடிய விடிய, கொண்டாட்டம் நிகழ்ச்சி போல இந்த ஆண்டு அண்ணா நகர் பகுதியிலும் நடைபெறும்.
சென்னையில் பல கல்லூரி கலைக்குழுக்களும் சென்னை சங்கமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். வரும் ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள் அவரவர் பகுதிகளில் சென்னை சங்கமம் கலை -பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஊக்கு விக்கப்படுவார்கள்.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 62 விதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலவித நடனங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா கலை குழுக்களும் பங்கேற்கின்றன.
இது தவிர குறும்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்காக 40-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து சிறப்பாக காட்டப்படும்.
மேலும் பூங்காக்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
தற்போது 17 பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வடசென்னையில் சில குறிப்பிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சென்னை சங்கமம் கலை விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மல்கம்பர், வாள் வீச்சு, உறியடி, வழுக்குமரம் போன்றவையும் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டு போல உணவுத் திருவிழாவும் நடைபெறும்.
இதில் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் கடலை மிட்டாய், பால்கோவா, திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி போன்ற உணவுகளும் வழங்கப்படும்.
சங்கமத்தின் நிறைவுவிழா பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஜனவரி 16-ந்தேதி மாலை பிரமாண்ட வாணவேடிக்கையுடன் நிறைவு பெறும்.
இது தவிர தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சென்னை பிலிம் சென்டரில் நடக்கிறது. கடந்த ஆண்டு 100 கவிஞர்கள் பாடிய கவிதைகள் கவிதை குற்றாலம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு உள்ளது.
இதை நான் வெளியிடுகிறேன். ராஜாத்தி அம்மாள் பெற்றுக்கொள்வார். விழாவில் கி.வீரமணி, வைரமுத்து பங்கேற்கிறார்கள்.
தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகளில் ஜெயகாந்தன் நூல் ஆய்வு, 100 கவிதைகளும் 25 கவிஞர்களும் என்ற கவிதை விழா உள்பட பல்வேறு இலக்கிய ஆய்வுகள் நடக்கிறது.
கடந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்த ரூ. 3 கோடி செலவானது. இந்த ஆண்டும் அதே அளவு செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம். கலைஞர்களுக்கு மட்டும் ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
தமிழக அரசு இதற்கு ஓரளவு உதவி செய்தது. இந்த ஆண்டும் முதல்-அமைச்சர் கலைஞரை சந்தித்து உதவி கேட்போம்.
நிகழ்ச்சிகளை நாங்களே எப்போதும் ஏற்று முழுமையாக செலவு செய்து நடத்த முடியாது. இதற்கு ஸ்பான்சர்கள் தேவை. இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை.
என்றாலும் ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறோம். இது போன்ற கலை நிகழ்ச்சிகளை அரசும் அந்தந்த பகுதி மக்களும் ஏற்று நடத்த வேண்டும்.
இதன் மூலம் தமிழக கிராமிய கலைஞர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் "என்றார் .
பேட்டியின் போது தமிழ் மைய நிறுவனர் ஜெகத்கஸ்பர் ராஜ், லதா பாண்டியராஜன், பிரசன்னா ராமசாமி, கவிஞர் இளைய பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment