ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட "பருந்து' படையினரால், மீனவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சீனாவின் அச்சுறுத்தலிருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சுற்றிலும் 7500 கி.மீ., சுற்றளவு கொண்ட கடல் பரப்பு உள்ளது. கடல்வழியாக ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், கடலோர பகுதிகளில், கடற்படையை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில், பதட்டத்துக்குரிய ராமநாதபுரத்தில் கடற்படை சார்பில், மார்ச் 26ல் "பருந்து' என்ற பெயரில் கடற்படை விமானதளம் அமைக்கப்பட்டது. "கமாண்டோ அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான இப்படை மூலம் தென்னிந்தியாவின் பாதுகாப்பு வலுப்படும், புலிகளின் ஊடுருவல் தடுக்கப்படும்,' என, கருதப்பட்டது. இப்படை அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, இலங்கையில் புலிகள் அமைப்பு கூண்டோடு அழிந்தது.
அதன்பின், பெரிய அளவில் ஊடுருவல் இருக்காது என்ற ரீதியில், இந்திய கடற்பகுதியில் பாதுகாப்பு பணிகள் தொய்வடைந்தது. இதை நன்றாக பயன்படுத்தி இலங்கை, சீனாவை கச்சத்தீவு வரை கால்பதிக்க வைத்தது. அதன் பின் இப்படையினரால், உள்ளூர் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் உதவியில்லை. போதிய உபகரணங்கள், தேவைக்கும் அதிகமான வீரர்கள் இருந்தும், தமிழக மீனவர்கள் நாள் தோறும் தாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு தான் என்று பார்த்தால், படையினரின் சோகம், அதை விட மோசமாக உள்ளது. இந்திய கடற்படை வீரர்களை, இலங்கை மீனவர்கள் கடத்திய சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். இந்நிலைக்காகவா இத்தனை கோடி ரூபாயை இந்திய அரசு செலவு செய்தது? கோடிகளை கொட்டி படைகளை அமைப்பது பெரிதல்ல, அவற்றை பயன்படுத்த தவறினால் விளைவுகளை விலைகொடுத்து வாங்க நேரிடும் என்பதை மத்திய அரசு சிந்திக்க வேண்டும். சுற்றிவரும் அச்சுறுத்தலை சமாளிக்க "பருந்து" பறக்க வேண்டியது அவசியமாகிறது.
No comments:
Post a Comment