அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் - லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சுற்றி வளைத்து அந்த மர்ம நபரையும் கைது செய்தனர்.அவனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள நபர் நைஜீரியாவைச் சேர்ந்தவன். அவன் பெயர் உமர் பரூக் அப்துல் முதாலப்(23). லண்டனில் இன்ஜினியரிங் படித்துள்ளான். அல் - குவைதா அமைப்புடன் இவனுக்கு தொடர்பு உண்டு.அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்த்து, மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதே இவனது நோக்கம்.
இதற்காக, பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடிமருந்தை, தனது காலில் "டேப்'போட்டு ஒட்டியிருந்தான். அந்த வெடி மருந்துகளுக்குள், ஊசி மூலம் திரவத்தை செலுத்தினால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும். இதற்கு முயற்சித்தபோது தான், சக பயணிகள் பார்த்து விட்டனர்.இதனால், பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. முதாலப்புக்கு கடுமையான தீக் காயம் ஏற்பட்டுள்ளது. மிச்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிமருந்துகளை பெறுவதற்காகவும், அதை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என பயிற்சி பெறுவதற்காகவும், அவன் ஓமன் சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவறையில்தயாரிப்பு வேலை:விமானத்தை வெடிக்கச் செய்வதற்காக, விமானத்தில் உள்ள கழிவறையில் முதாலப் 20 நிமிடங்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளான். மீண்டும் அவன் இருக்கைக்கு திரும்பிய போது, அவனிடமிருந்து வெடிமருந்து பொருள் நாற்றம் வீசியுள்ளது. அரை அடிநீளமுள்ள பாக்கெட்டில் வெடிமருந்து பொருளை அவன் மறைத்து வைத்திருந்தான். அதுமட்டுமல்லாது, அவனது பேன்ட் அடிபாகத்தில் தீ எரிந்துள்ளது. அப்போது சக பயணிகள் சந்தேகப்பட்டு, அவனை மடக்கி பிடித்துள்ளனர்.அப்துல் முதாலப்பின் தந்தை, நைஜீரியாவில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.
20 ஆண்டு சிறை:விமானத்தை தகர்க்க முயற்சி செய்ததாக முதாலப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போது மருத்துவமனையில் முதாலப் சிகிச்சை பெற்று வருவதால், அடுத்த மாதம் 8ம் தேதி தனிப்பட்ட முறையில் விசாரணை நடக்க உள்ளது. அதுவரை அவனுக்கு ஜாமீன் கொடுக்க முடியாது' என, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். முதாலப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
கடும் பாதுகாப்பு:நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தையொட்டி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் , பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ் இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்கள் அதிக பட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே விமானத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.அமெரிக்காவின் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், அமெரிக்கா நோக்கி வரும் அனைத்து விமானங்களிலும் கூடுதல் பரிசோதனை நடத்தும் படி அதிபர் ஒபாமா, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஹவாய் தீவில் குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார் ஒபாமா. இருப்பினும் நாட்டு நடப்புகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிச்சர்டு ரீட் என்பவன் ஷூ குண்டு மூலம் டிரான்ஸ் அட்லாண்டிக் விமானத்தை தகர்க்க திட்டமிட்ட போது பிடிப்பட்டான். ரிச்சர்டு ரீட் தனது ஷூவில் "பெடின்' எனப்படும் சக்தி வாய்ந்த வெடிமருந்தை மறைத்து வைத்திருந்தான். இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான், முதாலப்பும் விமானத்தை தகர்க்க திட்டமிட்டுள்ளான். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் அமெரிக்க விமானங்களில் நிறைய கூட்டம் இருக்கும் என்பதால் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்த, பயங்கரவாதிகள் இந்த காலக்கட்டத்தை தேர்ந்தெடுப்பதாக, புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment