சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஹேமலதாவிடம் விசாரணை நடத்திய போலீசார் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.
இதேபோல் விசாரணைக்கு ஆஜராக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை கனிவாகவும், கட்டளையிட்டும் அழைத்து பார்த்தனர். ஆனால் அவர் போலீசாரை கண்டு கொள்ளவில்லை. சாமியார் வழக்கை நிதானமாக விசாரிப்பார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமியார் போலீசாருக்கு நிதானமாகவே ஒத்துழைப்பு கொடுக்கலாம் என்று தலைமறைவாகிவிட்டார்.
நாட்கள் நீண்டு கொண்டே போனதால் சாமியாரை பிடித்து வந்தாவது விசாரிக்கும் முடிவுக்கு போலீசார் வந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சாமியாரின் செல்போன் மூலம் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை பிடிக்க தனிப்படை பெங்களூர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 2 நாட்கள் தேடிய பின்னர் சாமியார் பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சுற்றிவளைக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்குள்ளாக சாமியாருக்கு போலீஸ் வரும் தகவல் தெரிந்துவிட்டது.
உடனடியாக அவர் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவசர அவசரமாக பெங்களூர் விமானநிலையம் சென்றார். அங்கிருந்து விமானத்தில் ஏறி டெல்லிக்கு தப்பி சென்றார். போலீசார் எவ்வளவோ முயன்றும் சாமியாரை மடக்கிபிடிக்க முடியவில்லை.
அவர் வி.ஐ.பி.க்கள் செல்லும் முக்கிய வழியாக விமானத்தில் ஏறியதால் அவரை போலீசாரால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. முன்ஜாமீன் பெற வேண்டும் அல்லது கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தப்பி ஓடிவருகிறார்.
சென்னை, திருப்பதி, சீரடி, மும்பை, பெங்களூர், டெல்லி என்று திடீர் திடீரென விமானத்தில் ஏறி தப்பி ஓடும் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீசார் குழம்பிப் போயுள்ளனர். அங்கிருந்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி "சாமியார் மத்திய அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பதவியில் உள்ளார். இது சக்திவாய்ந்த பதவி. அதை வைத்து போலீசாரை பயமுறுத்தி வருகிறார். வழக்கு விசாரணையின்போது ஹேமலதா சாமியார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
குறிப்பாக தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
பின்னர் என்னிடம் விசாரிக்காமல் போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டனர் என்று சாமியார் புலம்பும் நிலை வந்துவிடக்கூடாது. அதேநேரம் இந்த வழக்கு தியாகராயநகர், கோட்டூர் புரம், அபிராமபுரம் உள்ளிட்ட 3 போலீஸ் நிலையம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
ஏற்கனவே தாமதமாக விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கையும் தாமதமாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
இதற்கிடையே தியாகராய நகரில் புத்தாண்டு பண்டிகை, வியாபாரம் சூடிபிடிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாதுகாப்பு பணிக்கே போலீசார் இல்லாமல் அல்லாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சாமியார் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர் " என்றார் .
No comments:
Post a Comment