
Mon, 19/10/2009
இலங்கையின் மேம்பாட்டுக்கு உதவ வெற்றிகரமான இலங்கைச் சிங்கப்பூரர்கள் தயாராக இருக்கிறார்கள். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ இலங்கையில் இவ்வாறு கூறினார். இலங்கையில் அமைதி நிரந்தரமாகி, சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கை வலுவடையும் பட்சத்தில் சுற்றுலா, கல்வி, வெளி நேரடி முதலீடு எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்று தாம் நம்வுவதாகவும் அவர் குறிப்பிட்டார். என்றாலும் இலங்கை எதிர்காலம் குறித்து அவர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை தெரிவித்தார். இலங்கைப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூரின் வெளியறவு அமைச்சர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் உலகப் புகழ் நெல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பிச் சென்றார். பழமையான தமிழர் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்ற யாழ்ப்பாண நூலகத்துக்குப் புத்தகங்களை கொடையாகத் தந்த அவர், “எரிக்கப்பட்டு மீண்டும் எழுந்து நிற்கும் இந்த நூலகத்தைப் போல, சாம்பலில் இருந்து உயிர்த் தெழும்பும் பீனிக்ஸ் பறவை போல இலங்கை தமிழ்ச் சமூகம் மீண்டும் உயர்ந்த நிலையை அடையும்,” என நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சரின் இலங்கை பயணம் நெடுகிலும் பல நல்ல அறிகுறிகள் புலப்பட்டன. அமைச்சர் திரு இயோ, யாழ்ப் பாண நூலகத்தில் குத்துவிளக்கு ஏற்றிய போது பக்கத்தில் இருந்த ஒரு கோவிலில் மணி அடித்தது. அமைச்சருடன் சென்றிருந்த சிங்கப்பூரின் பொதுத் தூதுவர் திரு கோபிநாத் பிள்ளை உட்பட அங்கிருந்த பலரும் இதை ஒரு நல்ல சகுனமாக மகிழ்ந்தனர். அமைச்சருடன் சென்றிருந்த டாக்டர் சி.ஆனந்தகுமார், “பல முறை இலங்கைக்கு பயணம் மேற் கொள்கிறேன். நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது பற்றி அரசாங்கம் யோசிப்பதை இந்தப் பயணத்தில் உணர முடிந்தது,” என்றார்.
No comments:
Post a Comment